பதிவு செய்த நாள்
25 ஏப்2018
00:56

புதுடில்லி : கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு அளித்த இலவச சேவைகளுக்கு, வரி செலுத்துமாறு வங்கிகளுக்கு, மத்திய வரித் துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. பொது மற்றும் தனியார் துறை வங்கிகள், அவற்றின் வர்த்தக வளர்ச்சிக்காக, சிறப்பு பிரிவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் வழங்குகின்றன.
கட்டணம் :
குறிப்பிட்ட காலத்திற்கு பெருந்தொகையை, ‘டிபாசிட்’ செய்வோர்; வங்கி சேமிப்பு கணக்கில், லட்சம் ரூபாய்க்கு மேல் குறைந்தபட்ச இருப்பை பராமரிப்போர் போன்றவர்களை, வங்கிகள் சிறப்பு வாடிக்கையாளர்களாக அடையாளப்படுத்தி, தனி கவனம் செலுத்துகின்றன. நிர்ணயித்ததற்கு மேற்பட்ட, ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளுக்கு, சாதாரண வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வங்கிகள், சிறப்பு வாடிக்கையாளர்களிடம் அதுபோல வசூலிப்பதில்லை.
மேலும், சாதாரண வாடிக்கையாளர்களிடம் காசோலை புத்தகம், ‘டெபிட் கார்டு’ உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகள், சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு இச்சேவைகளை இலவசமாக அளிக்கின்றன. வங்கிக் கணக்கில், குறிப்பிட்ட இருப்புத் தொகையை பராமரிப்பதற்காக இந்த இலவசங்கள் வழங்கப்படுகின்றன. வங்கிகள் வழங்கும் இது போன்ற சேவைகள் அல்லது வாடிக்கையாளர்கள் பெறும் பயன்கள், சேவைகள் வரிச் சட்டப்படி, ‘மதிப்புமிகு சேவை’ ஆக கருதப்படுகிறது.
உத்தரவு :
வங்கிகள் இத்தகைய சேவைகளை இலவசமாக அளித்தாலும், அச்சேவைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என, சேவை வரிச் சட்டம் கூறுகிறது. சாதாரண வாடிக்கையாளர்களிடம், ஏ.டி.எம்., பரிவர்த்தனைகள், குறைந்தபட்ச இருப்பு இல்லாதது, எஸ்.எம்.எஸ்., சேவை போன்றவற்றுக்கு, கட்டணத்துடன் சேவை வரியும் வங்கிகள் வசூலிக்கின்றன.
ஆனால், சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு, இதே சேவைகளை இலவசமாக வழங்குவதுடன், வரியும் வசூலிக்காமல் உள்ளன. எனவே, ‘சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கும், ஏ.டி.எம்., பரிவர்த்தனைகள், காசோலை, டெபிட் கார்டு உள்ளிட்ட சேவைகளுக்கு, வரி செலுத்த வேண்டும்’ என, எஸ்.பி.ஐ., – ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட முன்னணி வங்கிகளுக்கு, மத்திய சரக்கு மற்றும் சேவைகள் வரி புலனாய்வு பிரிவு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, இப்பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளில், வங்கிகள் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு அளித்த இலவச சேவைகளுக்காக வரி செலுத்துமாறு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது. இதன்படி வங்கிகள், 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி செலுத்த வேண்டியிருக்கும். வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் வசூலித்த தொகையின் அடிப்படையில், செலுத்த வேண்டிய வரி மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிர்ச்சி:
இலவச சேவை தொடர்பான, வரி துறையின் அதிரடி உத்தரவால், வங்கிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதுவரை வழங்கிய சேவைகளுக்காக, வாடிக்கையாளர்களிடம் வரி வசூலிக்க முடியாது என்பதால், இப்பிரச்னை குறித்து, மத்திய அரசிடம் முறையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|