பதிவு செய்த நாள்
26 ஏப்2018
03:18

புதுடில்லி : ‘நடப்பாண்டின், முதல் அரையாண்டில், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவில், சராசரியாக, 7.8 சதவீதமாக உயரும்’ என, ஜப்பானைச் சேர்ந்த நிதி ஆலோசனை நிறுவனமான, ‘நோமுரா’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், முதலீடுகள் அதிகரித்து வருகின்றன; அதேசமயம், மக்களின் நுகர்வும் உயர்ந்து வருகிறது. இந்த இரு அம்சங்களும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.
இந்தியாவின் நிகர ஏற்றுமதி வளர்ச்சி குறைந்துள்ளது. இருந்தபோதிலும், அதை ஈடு செய்யும் அளவிற்கு, முதலீடுகள் குவிந்து வருகின்றன. மக்களின் தேவை அதிகரித்து உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., போன்றவற்றின் தாக்கத்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை காணப்பட்டது. இந்தியா, இந்த பாதிப்புகளில் இருந்து, 2017ன் பிற்பாதியில் மீளத் துவங்கியது. இந்த முன்னேற்றம், நடப்பாண்டின் முதல் பாதியிலும் தொடர்கிறது. அதனால், முதல் அரையாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, சராசரியாக, 7.8 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, அக்., – டிச., வரையிலான காலாண்டில், ஜி.டி.பி., 7.2 சதவீதமாக இருந்தது.கச்சா எண்ணெய்கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ஒரு பேரலுக்கு, 10 டாலர் உயர்ந்தாலும், அது, நாட்டின் சில்லரை பணவீக்கத்தில், 0.3 –- 0.4 சதவீத உயர்வுக்கு வழி வகுக்கும். நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும், 0.4 சதவீதம் அதிகரிக்கும். அதனால், தற்போதைய கச்சா எண்ணெய் விலையேற்றம் தொடர்ந்து நீடித்தால், ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டியை உயர்த்தக் கூடும்.
மத்திய அரசு, நிதி நிலையை கருத்தில் கொண்டு, சிக்கனத்தை கடைபிடிக்கிறது. இந்நிலையில், கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனால், இந்தியாவில் முதலீடுகள் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால், இரண்டாவது அரையாண்டில், இந்தியாவின், ஜி.டி.பி., வளர்ச்சி மிதமாகவே இருக்கும் என, தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி:
இம்மாதம், 5ம் தேதி கூடிய, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, நடப்பு 2018- – 19ம் நிதியாண்டில், ஜி.டி.பி., 7.4 சதவீதமாக உயரும் என, தெரிவித்திருந்தது. இது, கடந்த நிதியாண்டில், 6.6 சதவீதம் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, 6 சதவீத ரெப்போ வட்டியில் மாற்றமில்லை என, தெரிவித்தது. இக்குழு, தொடர்ந்து மூன்றாவது முறையாக, வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் மாதங்களில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், சில்லரை பணவீக்கம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஜூன் 5ல் நடைபெறும் ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ வட்டியில் மாற்றம் இருக்கும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|