பதிவு செய்த நாள்
12 மே2018
00:33

மும்பை:''வங்கிகள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையை நன்கு புரிந்து கொண்டு, அதன் வளர்ச்சிக்கு, கடன் வழங்க வேண்டும்,'' என, மத்திய தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வலியுறுத்திஉள்ளார்.
அவர், மும்பையில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பின் கூட்டத்தில், மேலும் பேசியதாவது:இந்தியாவில், மிகப் பெரிய வேலைவாய்ப்புகளை ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள் துறை வழங்குகிறது. ஆகவே, இத்துறையின் செயல்பாடுகளை சரிவர புரிந்து கொண்டு, நிதிச் சேவைகளை வழங்கும் வங்கி நடைமுறை தான் நமக்கு தேவை.
ஒரு துறையை பற்றி நன்கு புரிந்து கொள்ளாமல் அல்லது தகுதியற்ற நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, தேவையற்ற இடர்ப்பாடுகளை, வங்கிகள் சந்திக்க கூடாது.
நோக்கம்
எந்தவொரு வர்த்தகமாக இருந்தாலும், நியாயமற்ற முறையில் நடைபெறும் வங்கிச் சேவைகளுக்கு, அரசு ஆதரவளிக்காது.உண்மையாக தொழில் புரிவோருக்கும், அதிக நம்பகத்தன்மை கொண்ட நிறுவனங்களுக்கும், இடர்ப்பாட்டையும் சமாளிக்கும் திறன் கொண்ட வர்த்தக நிறுவனங்களுக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
அதனால், வங்கிகள் நிதியுதவி அளிக்கும்போது, குறிப்பிட்ட துறையின் செயல்பாடுகளை முழுமையாக புரிந்து கொண்டு, அவற்றின் நிதி நடைமுறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.இந்த வகையில், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை வளர்ச்சிக்கு, வங்கிகள் ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல்சோக்சி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.இந்த மோசடி, வங்கிகள் வழங்கும், ‘எல்.ஓ.யு.,’ எனப்படும் கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றது தெரியவந்தததை அடுத்து, இவ்வகை ஆவண நடைமுறையை, ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
பாதிப்பு
இத்துடன், ‘எல்.ஓ.சி.,’ எனப்படும் மூன்றாம் நபர் கடன் பொறுப்பேற்பு ஆவண நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால், இத்தகைய நடைமுறைகளின் கீழ், குறைந்த வட்டியில் கடன் பெற்று வந்த ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதிக வட்டி செலவினம், திரும்ப அளிக்கப்படும் வரியை பெறுவதில் தாமதம் போன்ற, இடர்ப்பாடுகளை சந்தித்துள்ளனர்.
இந்த பிரச்னைகள் குறித்து, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பு, மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் வெள்ளை அறிக்கை வழங்கியுள்ளது.அதில், கடன் பெறும் ஆவண நடைமுறைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்; விற்றுமுதல் சார்ந்த வங்கி நிதியுதவி திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
ஏற்றுமதி அதிகரிப்பு
கடந்த, 2004 – -05ம் நிதியாண்டில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் நிகர ஏற்றுமதி, 1,566 கோடி டாலராக இருந்தது. இது, 2016-– 17ல், 3,559 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ஏற்றுமதியில், அமெரிக்கா, ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளின் பங்களிப்பு, 75 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|