பதிவு செய்த நாள்
21 மே2018
00:22

அரசியல் நிகழ்வுகளை விட, பொருளாதார நிகழ்வுகள் வேகம் பிடிக்க துவங்கி உள்ளன. ஆனாலும், அவற்றை நாம் அதிகம் கண்டுகொள்ளவில்லை. கச்சா எண்ணெயின் விலை, 80 டாலரை கடந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 68ஐ தொட்டது. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, நான்காவது வாரமாக குறைந்தது. நாட்டின் வணிக பற்றாக்குறை விரிவு அடைந்தது.
இவற்றை பொருளாதாரத்திற்கான எச்சரிக்கை மணி என்று சொன்னால் மிகை அல்ல. இத்தகைய சூழல் வெகுகாலத்திற்கு பின் தற்போது உருவாகி உள்ளது. பொருளாதாரச் சூழல்கள் மாறுவது அரசுகளின் கையில் இல்லை. ஆனால், அவற்றின் தாக்கம் அறிந்து செயல்படுவது அரசுகளின் பொறுப்பு. இடையில் வரும் அரசியல் நிர்பந்தங்களையும், நெருக்கடிகளையும் கடந்து போகும் துணிவை, அரசு வெளிப்படுத்த வேண்டும்.
அரசு கொள்கை:
இந்த அரசு அத்தகைய துணிவை இதுவரை வெளிப்படுத்தி இருந்தாலும், இந்த காலக்கட்டம் மிக முக்கியமானது. வளரும் சூழலுக்கு ஏற்ப அரசு அமைக்கும் வியூகங்கள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை. அந்த வியூகங்களை அமைப்பதில் அரசு காட்டும் நாட்டமும், தீவிரமும், பொருளாதாரத்தின் மீது, நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும்.ஒரு முதலீட்டாளராக, அரசிடம் நாம் என்ன எதிர்பார்க்க வேண்டும்?
முதலில், கடினமான காலகட்டத்தில், கடினமான முடிவுகளை எடுக்க அரசு துணிய வேண்டும். பற்றாக்குறைகள் வளராத வண்ணம், நம் பொருளாதாரத்திற்கு உகந்த முடிவுகளை எடுக்க அரசு முனைய வேண்டும். அன்னிய நேரடி முதலீடுகள் தொடர்ந்து பெருக வழிசெய்ய வேண்டும்.தொடர்ந்து பன்னாட்டு முதலீடுகள் இந்தியாவிற்கு வர வேண்டுமெனில், அரசு காட்டும் துணிச்சலும், சீர்திருத்த நகர்வுகளும் விரைந்த செயல்பாடாக அமைய வேண்டும். வாக்குவங்கி அரசியலுக்கு பணியாமல், பொருளாதார மேலாண்மையின் தரம் பாதிக்காத வண்ணம், அரசு கொள்கைகளை நகர்த்த வேண்டும்.
வலிமையான பாரதம்:
குறுகிய கால கஷ்டங்களுக்கும், அரசியல் நெருக்கடிகளுக்கும் அஞ்சாது ஆட்சி செய்ய வேண்டும்.இத்தகைய காலகட்டத்தில், அரசு முடிவெடுக்க தயங்கினால், சந்தை சூழல், அரசின் நிலைமையை இக்கட்டில் கொண்டு போய் நிறுத்தும் தன்மை கொண்டது. அரசு தானே முன்வந்து கடினமான முடிவெடுக்கும் பட்சத்தில், அவை தரும் சிரமங்கள், நிர்பந்தத்தில் எடுக்கும் முடிவுகளை விட மிதமாக இருக்கும். இதை அனைவரும் உணர வேண்டும்.
உதாரணமாக, பெட்ரோலியப் பொருள்களை, ஜி. எஸ். டி., சட்டத்திற்கு உட்படுத்துவது. இதற்கு அதிக துணிவு தேவை. மற்ற பொருட்களில் இருந்து வரும் வருவாய் பெருக்கத்தை சரியாக கணித்து, இந்த துணிகர முடிவை எடுக்க வேண்டும். மற்ற பொருள்களில் வரி ஏய்ப்பை தடுத்து, அவற்றில் வரி பெருக்கம் ஏற்பட்டால், அதுவே அரசுக்கு உரிய நிதி வலிமையை தரும்.‘‘நல்ல பொருளாதாரமே நல்ல அரசியலுக்கு வழி செய்யும்’’ என்ற அடிப்படை புரிதலை, இந்த அரசு இதுவரை கடைபிடித்து வருகிறது. அந்த நம்பிக்கை சார்ந்து, இனி அடுத்த கட்டம் நோக்கி வேகமாக நகர வேண்டி உள்ளது. அப்படி நகர்ந்தால், இதையும் கடந்து ஒரு வலிமையான பாரதம் அமையும்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|