பதிவு செய்த நாள்
21 மே2018
00:25

டாலருக்கு இணையான, இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவு சரிந்துள்ளது, கவலையையும், பயத்தையும் ஒருங்கே எழுப்பியுள்ளது. இதன் அர்த்தம் என்ன? எப்படி ரூபாய் மதிப்பு வீழ்ச்சி நம்மை பாதிக்கப் போகிறது?
சர்வதேச வர்த்தகத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது, அமெரிக்க நாணயமான, டாலர். அதன் விலையேற்றமும், வீழ்ச்சியும், உலகின் பல நாடுகளின் நாணயங்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதில், நம் இந்தியாவும் விதிவிலக்கல்ல. சமீபத்தில், ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு, 68.08 என்ற அளவுக்குச் சரிந்துபோனது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை ரூபாயின் மதிப்பு, 6 சதவீதம் சரிந்துள்ளது. பதினைந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு, ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது கவலை அளிக்கிறது.
சரிவு ஏன்?
நீங்கள் கத்திரிக்காய் வாங்கப் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அன்றைக்கு ஏராளமான பேர் கத்திரிக்காய் வாங்க வருகின்றனர். சந்தைக்கு வந்த கத்திரிக்காயின் அளவோ குறைவு என, வைத்துக்கொள்ளுங்கள். அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துவிடும் இல்லையா? இதுதான் டாலர் விஷயத்தில் நடக்கிறது.இங்கே தேவை அதிகம். டாலர் இருப்பு குறைவு. ஏன் டாலர் புழக்கம் குறைந்துபோனது? நம் ஏற்றுமதியாளர்கள் நாணயச் சந்தையில் டாலரை அதிகம் விற்பனை செய்யவில்லை.
இரண்டாவது காரணம், அன்னிய முதலீடுகள் குறைந்துபோய்விட்டது. அவர்கள் நாணயச் சந்தையில் டாலரை விற்று ரூபாய் ஆக்கித்தான் இந்திய பங்கு மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். இந்திய சந்தைகளில் முதலீடு செய்யும் ஆர்வம் குறைந்துபோனதால், அந்நிய முதலீட்டாளர்கள் டாலரைக் கொண்டுவரவில்லை.
இதேசமயத்தில், இன்னொரு விஷயமும் நடந்து வருகிறது. அமெரிக்க பொருளாதாரம் வலிமை பெற்று வருகிறது. மேலும், அங்கே வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவும், பெருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, சர்வதேச நாணயங்களுக்கு இணையான டாலர் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்றாவது முக்கிய காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வு. சமீபத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 80 டாலரைத் தொட்டுவிட்டது. நம் இந்திய பெட்ரோலியத் தேவையில், 70 சதவீதத்தை இறக்குமதி செய்துவருகிறோம். இந்நிலையில், கூடுதல் டாலர் கொடுத்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை. இதனால், டாலரின் தேவை அதிகரித்துள்ளது.
நடப்பு கணக்கு :
இதன் விளைவாக, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்குப் பற்றாக்குறையின் அளவு, 1.7 சதவீதமாக உள்ளது. இது, 2018-- – 19ம் நிதியாண்டின் இறுதியில், 2.4 சதவீதமாக உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது கோல்டுமென் சாக்ஸ் என்ற ஆய்வு நிறுவனம். இதனால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி துரிதமாகலாம். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க, ஆர்.பி.ஐ., சர்வதேச நாணயச் சந்தைகளில் செயல்பட்டு வருவது தெரிகிறது.நம் நாணய கையிருப்பு, 2.5 பில்லியன் டாலர்கள் குறைந்து, 423.58 பில்லியன் டாலர்களாக தற்போது உள்ளது. அதாவது, தன் கையிருப்பில் உள்ள தொகையை முதலீடு செய்வதன் மூலம், டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, ஆர்.பி.ஐ., முயற்சி செய்து வருகிறது. ஆனாலும், இந்த வீழ்ச்சி இத்தோடு நிற்கப் போவதில்லை. ஒரு டாலரின் மதிப்பு, 70 ரூபாயைத் தொடக்கூடும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிப்பு என்ன?
வெளிநாட்டு சுற்றுலா செல்வோர் கூடுதல் ரூபாய் செலவழிக்க வேண்டும். வெளிநாட்டில் படிக்கும் பிள்ளைகளுக்கு பணம் அனுப்பும் போது, கூடுதல் தொகை அனுப்ப வேண்டும். இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டும். எண்ணற்ற துறைகளில், நாம் பல கருவிகளை இறக்குமதி செய்து வருகிறோம். அவற்றின் விலை உயர்ந்துவிடும். தங்கத்தை நாம் இறக்குமதி தான் செய்து வருகிறோம். அதன் விலையும், ‘கிடுகிடு’வென உயர்ந்து விடும்.ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் பாதிப்புகள் பரவலானது. தொட்டு தொட்டு ஒவ்வொரு பொருளிலும், அதன் தாக்கம் வெளிப்படும். பெட்ரோல் விலை நான்கு ரூபாய் வரை உயர்ந்தது, இதன் பாதிப்புகளில் ஒன்று.
என்ன செய்யலாம்?
கச்சா எண்ணெயின் விலை, நம் கையில் இல்லை. அது தானாக இறங்கினால் தான் உண்டு. அடுத்து, ஜூன் மாதம் முதல் வாரத்தில் வரவிருக்கும் நிதிக் கொள்கை குழுவின் சந்திப்பில் எடுக்கப்படும் முடிவுகள் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் இரண்டு தீர்வுகள் முக்கிய மானவை. ஒன்று, வெளிநாட்டில் சம்பாதித்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவோர் ஏராளம். அவர்களை மையப்படுத்தி, சேமிப்புகளை திரட்டும் வங்கிகள் உண்டு. அந்த வங்கிகளுக்கும், முதலீடுகளுக்கும் சிறப்புச் சலுகைகள் கொடுப்பதன் மூலம், ஏராளமான, பாதுகாப்பான அன்னிய முதலீடுகள் இந்தியாவுக்கு வந்து சேரும். 2013ல் இந்த நடைமுறையை பின்பற்றியதன் விளைவாக, அப்போது சரிவைச் சந்தித்த ரூபாயின் மதிப்பு, பின்னர் உயர்ந்தது.
உற்பத்தி திறன்:
அதேபோல், நம் ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும். சீனாவிலும், இந்தியாவிலும், தொழிலாளர்களின் ஊதியங்கள் ஓரளவுக்கு ஒரேமாதிரி தான் இருக்கின்றன. ஆனால், சீனாவிலோ அந்தத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன், இந்திய பணியாளர்களைவிட இருமடங்கு அதிகமாக உள்ளது. அதனால், அவர்களுடைய தயாரிப்புகளின் அடக்கவிலை மிகவும் குறைவாக இருக்கிறது. சர்வதேச சந்தையில், விலை போட்டியில் இந்தியா முதன்மை பெறவேண்டுமானால், நம் உற்பத்தி செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இதனை செய்வதன் மூலம், ஏற்றுமதிகள் அதிகமாகும். அன்னிய செலாவணி அதிகமாக இந்தியா வந்துசேரும். ரூபாயின் மதிப்பு சமச்சீர் அடையும்.
எல்லாவற்றுக்கும் மேல் ஒன்று இருக்கிறது. அது கச்சா எண்ணெய். எவ்வளவு விரைவாக நாம் மாற்று எரிசக்திகளை நோக்கி நகர்கிறோமோ அவ்வளவு நல்லது. குறிப்பாக மின்சாரம். இல்லையெனில், கச்சா எண்ணெய் இறக்குமதியினால், நம் ரூபாய் தொடர்ந்து பாதிப்பைச் சந்தித்துக்கொண்டே இருக்கப் போவது உறுதி. டாலர் தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக்கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு நிம்மதி கிடைக்கும்.
-ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|