பதிவு செய்த நாள்
07 ஜூன்2018
00:22

அவினாசி:குஜராத் உட்பட பிற மாநிலங்களில் இருந்து, அதிகளவு நிலக்கடலை சந்தைக்கு வர துவங்கியிருப்பது, தமிழக விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி, மதுரை, உடுமலை உட்பட பல இடங்களில், நிலக்கடலை சாகுபடி, பல ஆயிரம் ஏக்கரில் நடக்கிறது.பல பகுதிகளிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடக்கும் ஏலத்தில், சிறு, குறு விவசாயிகள், நிலக்கடலையை விற்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே, சேவூர் ஒழுங்குமுறை கூடத்தில் நடக்கும் ஏலத்துக்கு கொண்டு வரப்படும் நிலக்கடலை, தரம் நிறைந்ததாக உள்ளது. இதனால், சந்தையில் கிராக்கி அதிகம். பல சமையல் எண்ணெய் நிறுவனங்கள், ஏலத்தில் பங்கேற்று, நிலக்கடலையை கொள்முதல் செய்கின்றன.
தற்போது, நிலக்கடலை விளைச்சல் குறைவு என்பதால், விவசாயிகளுக்கு, 1 கிலோவுக்கு, 40 – 45 ரூபாய் விலை கிடைக்கிறது. ஆனால், கடந்தாண்டு, இதே கால கட்டத்தில், 50 – 55 ரூபாய் விலை கிடைத்தது. விளைச்சல் குறையும்பட்சத்தில் விலை அதிகரிக்க வேண்டும். ஆனால், எதிர்பாராத விதமாக விலை குறைகிறது. இதற்கு, வட மாநிலங்களில் இருந்து, அதிகளவு நிலக்கடலை தமிழக சந்தைக்கு வருவதே காரணம் என, விவசாயிகள் கூறுகின்றனர்.அவினாசி வட்டார விவசாயிகள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், உடைக்கப்படாத முழு நிலக்கடலையை, ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர். வியாபாரிகளும், அதை அப்படியே வாங்கி, விற்கின்றனர். அவற்றை கொள்முதல் செய்யும் சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், நிலக்கடலையை உடைத்து பயன்படுத்துகின்றன.குஜராத், ஆந்திரா உட்பட பிற மாநிலங்களில் இருந்து, உடைத்த நிலையிலேயே அதிகளவு நிலக்கடலை, தமிழக சந்தைக்கு வருகிறது; விலையும் குறைவாக கிடைக்கிறது. இதனால், வியாபாரிகளின் கவனம், வட மாநில நிலக்கடலை மீது திரும்பியுள்ளது. இது, தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|