பதிவு செய்த நாள்
07 ஜூன்2018
00:29

மும்பை:ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால், வங்கிகள் வழங்கும் வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி உயரும்.
நேற்று மும்பையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையிலான, நிதி கொள்கை குழு, மூன்றாவது நாளாக கூடியது.இக்கூட்டத்தில், ரெப்போ வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்தி, 6.25 சதவீதமாக நிர்ணயிக்க, உர்ஜித் படேல் மற்றும் ஆறு உறுப்பினர்களும் ஏக மனதாக ஆதரவுதெரிவித்தனர்.
கடந்த, 2014, ஜன., 28ல் ரெப்போ வட்டி, 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அது முதல், படிப்படியாக குறைந்து, 2017, ஆகஸ்டில், 6 சதவீதமாக நிலை கொண்டது. இந்நிலையில், நான்கு ஆண்டு களுக்கு பின், தற்போது, ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட நிதிக் கொள்கை அறிக்கை:கடந்த சில காலாண்டுகளாக, நாட்டின் பொருளாதாரம், ஸ்திரமாக எழுச்சி கண்டு வருகிறது. உற்பத்திக்கும், தேவைக்கும் உள்ள பற்றாக்குறை பெரும்பாலும் குறைந்துள்ளது; முதலீட்டு நடவடிக்கைகளும் அதிகரித்து உள்ளன.
இவையெல்லாம், பொருளாதாரம் மந்தநிலையில் இருந்து மீண்டு வருவதை தெரிவிப்பதாக உள்ளன. திவால் சட்டத்தின் கீழ், இடர்பாட்டு கடன்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளன.எனினும், சர்வதேசஅரசியல் நிலவரம், உலக நிதிச் சந்தையில் காணப்படும் ஏற்றத்தாழ்வு, உள் நாட்டு நலன் என்ற பெயரில், சில நாடுகள் எடுத்துள்ள வர்த்தக முடிவுகள், பொருளாதார மீட்சியை மந்தப்படுத்துவதாக உள்ளன.
இத்தகைய சூழலில், தனியார் துறை முதலீடுகள்முக்கியமானவையாக உள்ளன. மத்திய – மாநில அரசுகளின் பட்ஜெட் இலக்குகள், தற்போது வரை, பணவீக்க உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலேயே உள்ளன.எனினும், கச்சா எண்ணெய் விலை குறித்த மதிப்பீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் அறிக்கையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய், 68 டாலராக இருக்கும் என, அனுமானிக்கப்பட்டது. அதற்கு மாறாக, 80 டாலரை தாண்டியுள்ளது.
இது, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை பெருகவும், சில்லரை பணவீக்கம் உயரவும் வழி வகுத்துள்ளது.அதனால், நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், முதல் அரையாண்டில், சில்லரை பணவீக்கம், மறு மதிப்பீடு செய்யப்பட்டு, 4.8 –- 4.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, இரண்டாவது அரையாண்டில், 4.7 சதவீதமாக இருக்கும்.இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ரெப்போ வட்டி, 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது.
வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி, 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதேசமயம், நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக இருக்கும் என்ற மதிப்பீட்டில் மாற்றம் ஏதும் இல்லை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி உயர்வு காரணமாக, வங்கிகள் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி உயரும். கடன்தாரர்களின் மாத தவணை சுமை அதிகரிக்கும்.ஏற்கனவே, எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட சில வங்கிகள், கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. வீட்டு வசதி கடன் வழங்கும், எச்.டி.எப்.சி.,யும், வட்டியை உயர்த்தியுள்ளது.அடுத்து, மேலும் பல வங்கிகள் வட்டியை உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், ‘ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’ எனப்படும் பட்டியலில் சேர்க்கப்படும். இதன் மூலம், இவ்வங்கிகள் சுதந்திரமாக கிளைகளை விரிவுபடுத்தி, பரவலான நிதிச் செயல்பாடுகளில் ஈடுபட்டு, வர்த்தகத்தை மேம்படுத்தலாம்.
– ரிசர்வ் வங்கி அறிக்கை
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|