பதிவு செய்த நாள்
20 ஜூன்2018
00:23

பள்ளிபாளையம் : பருத்தி விலை உயர்வை தொடர்ந்து, நுால் விலையும் உயர்ந்து வருவதால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, தென்னிந்திய விசைத்தறி வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி கழக முன்னாள் துணைத் தலைவர் கருணாநிதி கூறியதாவது: சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், கோவை மாவட்டங்களில், முக்கிய தொழிலாக விசைத்தறி உள்ளது. நுால் விலையை பொறுத்து, துணி விலை நிர்ணயிக்கப்படும். சில மாதங்களாக, பருத்தி விலை உயர்ந்து விட்டது. கடந்த மாதம் பஞ்சு கொள்முதல் விலை, 360 கிலோவுக்கு, 45 ஆயிரம் முதல், 46 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இந்த மாதம், 49 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
பஞ்சு விலை உயர்வை தொடர்ந்து, நுால் விலையும், அனைத்து ரகத்திற்கு கிலோவுக்கு, 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். நுால் விலை உயர்வுக்கு ஏற்ப, உற்பத்தி செய்யப்பட்ட துணிகளின் விலையை உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்டர்கள் குறைந்து விட்டன.
பருத்தி விலை, நுால் விலை உயர்வால், விசைத்தறி தொழில் சரிவை நோக்கி செல்கிறது. ஒரு மாதமாக, உற்பத்தி செய்யப்பட்ட துணிகள், விற்பனை செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன. பருத்தி விலை குறைந்தால், நுால் விலை குறையும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், பருத்தி, நுால் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|