பதிவு செய்த நாள்
21 ஜூன்2018
00:12

கோவை : பஞ்சு விலை கிடுகிடுவென ஏறி வருவது, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
எப்போதும் ஒரு கண்டி (355.62 கிலோ) பஞ்சின் விலை, 36 ஆயிரம் ரூபாயில் இருந்து, 42 ஆயிரம் ரூபாய் வரையில் விற்கும். ஆனால், தற்போது ஒரு கண்டி பஞ்சின் விலை, 49 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இரு வாரங்களில் மட்டும், 4,000 ரூபாய் வரையில் விலை ஏறியிருக்கிறது. இதுதான் ஸ்பின்னிங் மில் அதிபர்களின் கலக்கத்துக்கு காரணம்.
ஜவுளித்துறையில் உலகளவில் கோலோச்சி வரும் சீன நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான பஞ்சை எப்போதும் அதிகளவில் இருப்பு வைத்திருக்கும். சமீப ஆண்டுகளாக அங்கு இறக்குமதிக்கு கட்டுப்பாடு கொண்டு வந்ததால், இருப்பு குறைய துவங்கியது. அதனால் சமீபத்தில், பஞ்சு இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை சீன அரசு தளர்த்தி உள்ளது. சீனா, இறக்குமதியை துவங்கும் என்ற எதிர்பார்ப்பால், சர்வதேச அளவில் பஞ்சின் விலை அதிகரித்துள்ளது.
பஞ்சு விலை உயர்வுக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. வர்த்தக போட்டியின் காரணமாக, சீன பொருட்களுக்கு, அமெரிக்க அதிபர், டிரம்ப் அதிக வரி விதித்தார். பதிலுக்கு சீனாவும், அமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதித்தது. அமெரிக்க பஞ்சை வாங்கினால், சீன நிறுவனங்கள் அதிக வரி செலுத்த வேண்டி வரும்.எனவே, சீன நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி கவனத்தை திருப்பும் என்ற எதிர்பார்ப்பில், பஞ்சை இருப்பு வைத்திருக்கும் வர்த்தகர்கள், விலையை உயர்த்த துவங்கிவிட்டனர்.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) செயலர் செல்வராஜ் கூறியதாவது: ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டம் பருத்தி வரத்து காலம். அப்போது பஞ்சு விலை சற்றே குறைவாக இருக்கும். அதன் பின்னர், மூன்று மாதங்கள் பஞ்சின் விலை ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும். ஜூன் மாதத்தில், விலை அதிகரிக்கும். அதனால்தான், இப்போது விலை அதிகரித்து இருக்கிறது.
மீண்டும் பருத்தி வரத்து துவங்கியதும், விலை கட்டுக்குள் வரும். சர்வதேச சந்தையில் தற்போது பஞ்சின் விலை அதிகரித்து இருப்பதால், இங்கும் விலையை அதிகரித்துவிட்டனர். நமக்கு தேவையான பஞ்சு கையிருப்பில் இருப்பதால், தட்டுப்பாடு ஏற்படும் என்று பயப்பட தேவையில்லை. செப்டம்பருக்கு பின், பஞ்சு விலை கட்டுக்குள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|