பதிவு செய்த நாள்
22 ஜூன்2018
00:17

கோவை : ‘‘இந்திய நுால் ஏற்றுமதி சந்தையை வியட்நாம் கைப்பற்றி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு உதவ வேண்டும்,’’ என, காட்டன் டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சிலின் (டெக்ஸ்புரோசில்) தலைவர் உஜ்வால் லகோடி தெரிவித்தார்.
கோவையில், தென்னிந்திய மில்கள் சங்கத்தினருடன் (சைமா) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின், அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: கடந்த, 2013 – 14ம் ஆண்டில், 13,100 லட்சம் கிலோவாக இருந்த இந்திய நுால் ஏற்றுமதி, 2017 – 18ம் ஆண்டில் 10,970 லட்சம் கிலோவாக குறைந்துவிட்டது. இந்த காலகட்டத்தில், வியட்நாம் முக்கிய போட்டியாளராக உருவெடுத்து வருகிறது. உலக வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக, வியட்நாம் பொருட்கள் இறக்குமதிக்கு வரிவிலக்கு கிடைத்திருப்பதால், இந்தியாவின் நுால் ஏற்றுமதி சந்தையை அந்நாடு கைப்பற்றி வருகிறது.
முக்கியமாக சீன சந்தையை, வியட்நாமிடம் இந்தியா இழந்து வருகிறது. சீனாவுக்கான வியட்நாம் ஏற்றுமதி, இந்தியாவுடன் ஒப்பிடுகையில், 22.8 சதவீதம் அதிகரித்து உள்ளது. உலகளவில் 47 சதவீத நுாலை, சீனா இறக்குமதி செய்கிறது. நமது ஏற்றுமதி சந்தையை வியட்நாம் கைப்பற்றுவது மிக முக்கியமான பிரச்னை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு உதவ வேண்டும்.
உலகளவில், 2015ம் ஆண்டில், 30 சதவீதமாக இருந்த இந்திய நுால் ஏற்றுமதி, 2017ம் ஆண்டில், 25 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த, 2012 – 13ல் 2,500 லட்சம் கிலோவாக இருந்த வியட்நாமின் ஏற்றுமதி, 2017 –18ல் 8,810 லட்சம் கிலோவாக உயர்ந்திருக்கிறது. உலகளவில் இரண்டாவது நுால் ஏற்றுமதி நாடாக வியட்நாம் உருவெடுத்து வருகிறது.
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, 2013 –14 காலகட்டத்தில், 6 முதல், 7 சதவீத ஏற்றுமதி சலுகைகள் இருந்தன. தற்போது, 1.2 சதவீத டூட்டி டிரா பேக் சலுகை மட்டுமே உள்ளது. 3 – 4 சதவீத சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறு, அவர் கூறினார்.
ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், மின்சாரம்!
‘சைமா’ தலைவர் நடராஜ் கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வராததால், அவற்றுக்கு செலுத்தும் வரியை எங்களால் ஏற்றுமதியின்போது திரும்ப பெற முடிவதில்லை. இவற்றை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வந்தால், எங்களால் வரியை திரும்ப பெற முடியும். மத்திய அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|