பதிவு செய்த நாள்
22 ஜூன்2018
00:21

புதுடில்லி : அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும், 29 பொருட்களுக்கான சுங்க வரியை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உருக்கு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு, முறையே, 25 மற்றும் 10 சதவீதம் வரி விதித்துள்ளார். இதனால், அமெரிக்காவிற்கு, உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில், கூடுதலாக, 1,600 கோடி ரூபாய் வரிச் சுமையை இந்தியா சந்திக்க நேர்ந்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா, சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறியுள்ளதாக, இந்தியா, உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளித்துள்ளது.
அத்துடன், அமெரிக்காவின் உத்தரவால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, அங்கிருந்து இறக்குமதியாகும், 800 சி.சி., இன்ஜின் திறனுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள், ஆப்பிள், பாதாம் உள்ளிட்ட, 30 பொருட்களுக்கு, 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க, மத்திய அரசு முடிவு செய்தது.
கடந்த வாரம், உலக வர்த்தக அமைப்பிடம் வரி விதிப்பு பொருட்கள் பட்டியலை வழங்கி, அவற்றுக்கான வரிச் சலுகைகள் திரும்பப் பெறப்படும் என, தெரிவித்தது. இந்நிலையில், மோட்டார் சைக்கிள் தவிர்த்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும், 29 பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் கொண்டைக்கடலைக்கு, சுங்க வரி, 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. துவரம் பருப்புக்கு, வரி, 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. போரிக் அமிலம் மற்றும் வார்படத் தொழிற்சாலைகளுக்கான, ‘பைன்டர்’ பொருட்களின் இறக்குமதி வரி, 7.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரசாயன மாற்றத்திற்கான மூலக்கூறுகள் இறக்குமதிக்கு, 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ‘அர்டிமியா’ எனப்படும், ஒரு வகை இறால்களுக்கு, சுங்க வரி, 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆப்பிள், பேரிக்காய், போல்டுகள், நட்டுகள், ஸ்க்ரூக்கள், ரிவிட்டுகள், இரும்பு மற்றும் உருக்கு பொருட்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள், டியூப், பைப் பிட்டிங் உள்ளிட்ட பொருட்களுக்கு, சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு, ஆக., 1 முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்களை, இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அவற்றுக்கான வரியை, அமெரிக்கா உயர்த்தியுள்ளதால், இந்தியாவுக்கு, கூடுதலாக, 1,6௦௦ கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
ஐரோப்பாவும்...
ஐரோப்பிய கூட்டமைப்பும், அமெரிக்க பொருட்களுக்கு, சுங்க வரியை, 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. பிஸ்கட், வேர்க்கடலை வெண்ணெய், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு, 22 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிற்கு, வரி விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி ஆளும் மாகாணங்களில் உற்பத்தியாகும் பொருட்களை தேர்ந்தெடுத்து, வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|