பதிவு செய்த நாள்
28 ஜூன்2018
00:08

சென்னை : ‘‘சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில், இந்திய அளவில், தமிழகம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது,’’ என, தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தகத் துறை முதன்மை செயலர், ராஜேந்திரகுமார் தெரிவித்தார்.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் சார்பில், சர்வதேச, எம்.எஸ்.எம்.இ., தினம், சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராஜேந்திரகுமார் பேசியதாவது: நாடு முழுவதும், 6.3 கோடி எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும், 49 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. இதில், 17 லட்சம் நிறுவனங்கள், முறையாக பதிவு செய்துள்ளன. இதன் மூலம் இந்திய அளவில், தமிழகம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
நிறுவனங்கள் தொழில் துவங்க, இணையதளம் வழியாக, ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பிக்கும் முறையை, நாட்டிலேயே, தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட, 45 நாட்களில், 46 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. தொழில் துவங்க மானியம் பெறும் விண்ணப்பங்கள், விரைவில் இணையதளம் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவன இயக்குனர், இறையன்பு பேசியபோது, ‘‘எங்களது நிறுவனம் மூலம், 2001 முதல், 1.9 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். ‘‘இந்த ஆண்டு, மேலும், 20 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்,’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருது, தாராவுக்கு வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு சிறந்த இளம் தொழில் முனைவோருக்கும், விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர், தர்மேந்திர பிரதாப் யாதவ், சிப்காட் தலைவர் செல்வி. அபூர்வா, தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர், பிரவீன் பி.நாயர் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|