பதிவு செய்த நாள்
28 ஜூன்2018
00:12

‘கியா’ மோட்டார் நிறுவனத்துக்கு உதிரிபாகம் சப்ளை செய்யும், முக்கிய நிறுவனமான, ‘மண்டோ இந்தியா’ 850 கோடி ரூபாயில், மீண்டும் ஒரு புதிய உற்பத்தி பிரிவை, சென்னையில் துவங்க உள்ளது.
கொரிய நிறுவனமான, கியா மோட்டார், தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு, பின் ஆந்திர மாநிலத்துக்கு சென்றது. இந்நிலையில், கொரியாவில், ஹூண்டாய், கியா மோட்டார் நிறுவனங்களுக்கு, பிரதான கார் உதிரி பாகங்களை தயாரித்து, சப்ளை செய்யும் மண்டோ நிறுவனம், சென்னையில் மீண்டும் ஒரு புதிய உற்பத்தி பிரிவை துவங்க உள்ளது.ஏற்கனவே, இந்நிறுவனம் சென்னையில் கார் உதிரி பாக தொழிற்சாலையை துவங்கி, அதில் இரண்டுக்கும் மேற்பட்ட விரிவாக்கங்களை செய்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கத்தில், 850 கோடி ரூபாயில், மண்டோ இந்தியா நிறுவனம், கார் உதிரிபாகம் தயாரிக்கும் புதிய உற்பத்தி பிரிவை அமைக்க உள்ளது. கியா மோட்டார் ஆந்திராவுக்கு சென்றதும், இந்நிறுவனமும் ஆந்திராவுக்கு செல்ல நடவடிக்கை மேற்கொண்டது.ஆனால், சென்னையில், இந்நிறுவனத்துக்கு ஏற்கனவே இரண்டு தொழிற்சாலைகள் இருப்பதால், இங்கேயே மீண்டும் தன் உற்பத்தி பிரிவை விரிவாக்கம் செய்ய, அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பயனாக, முதலாவது தொழிற்சாலையில், புதிய உற்பத்தி பிரிவை அமைக்க இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக பல கட்ட பேச்சுகள் நடைபெற்று, முடியும் நிலையில் உள்ளன. விரைவில், கார் உதிரிபாக உற்பத்தி பிரிவை அமைப்பதற்கான பணிகள் துவங்கும். இதனால், 2,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|