பதிவு செய்த நாள்
14 ஜூலை2018
00:45

புதுடில்லி:இனி வாடிக்கையாளர்களிடமிருந்து, ‘ஆர்டர்’ வந்தால் மட்டுமே, ‘நானோ’ காரை தயாரிப்பது என்ற முடிவுக்கு, ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம் வந்துள்ளது.
‘மக்களின் கார்’ என்ற அறிமுகத்துடன், மலிவு விலை காராக, டாடா நிறுவனத்தின் நானோ கார் சந்தைக்கு வந்தது. இருசக்கர வாகனத்தில் வெயிலிலும், மழையிலும் இந்திய குடும்பங்கள் செல்ல வேண்டிய நிலையை மாற்ற, இந்த மலிவு விலை காரை, 2009ல், ரத்தன் டாடா அறிமுகம் செய்தார். ஆனால், அவருடைய கனவு கார், எதிர்பார்த்ததற்கு மாறாக மக்களின் ஆதரவை பெறவில்லை.
கடந்த ஆண்டு, ஜூன் மாதம், 275 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டின் ஜூன் மாதத்தில், ஒரே ஒரு கார் மட்டுமே தயாரிக்கப்பட்டது.தயாரிப்பை போலவே, விற்பனையும் கடும் சரிவைக் கண்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், உள்நாட்டில், 167 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம், ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனை ஆனது.
ஏற்றுமதியை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 25 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த ஜூன் மாதத்தில், ஒரு கார் கூட ஏற்றுமதி செய்யப்படவில்லை.இதையடுத்து, இனிமேல் நானோ காரை, வாடிக்கையாளர் வாங்குவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தயாரிப்பது என்ற முடிவுக்கு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வந்துள்ளது.
‘இனி டீலர்களிடமிருந்து, ஆர்டர் வந்தால் மட்டுமே, இருப்பிலிருந்தோ அல்லது தயாரித்தோ வழங்கப்படும்’ என, இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவின் உதவி தலைவர், எஸ்.என்.பர்மான் தெரிவித்து உள்ளார். மேலும், ‘டியாகோ, டைகோர்’ ஆகிய கார்கள் தயாரிப்பிலும், விற்பனையிலும் அதிக வேகம் காட்டப்போவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|