பதிவு செய்த நாள்
20 ஜூலை2018
23:38

புதுடில்லி : ‘அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால், இந்தியாவில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின், ஆசிய – பசிபிக் பிராந்திய பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவின் பொருளாதார புள்ளிவிபரம் நன்கு உள்ளது. முக்கிய துறைகளின் வளர்ச்சி குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருப்பது சாதகமான அம்சமாகும். சமீப வாரங்களாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் ஸ்திரமாக உள்ளது.
வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளது; உள்நாட்டு வர்த்தகச் சூழலும் மேம்பட்டுள்ளது. இவையெல்லாம், நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்து வருவதை குறிக்கின்றன.
மிதமான பாதிப்பு :
இருந்தபோதிலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, அன்னிய முதலீடுகள் வெளியேறக்கூடும். எனினும், இது மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும். அமெரிக்கா, 2013ல், பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை குறைப்பதாக அறிவித்த போது, சர்வதேச சந்தைகள் சந்தித்த தாக்கம் போல இருக்காது.
அமெரிக்கா – சீனா ஆகியவை, இறக்குமதி வரியை பரஸ்பரம் உயர்த்தி வருகின்றன. ஐரோப்பிய கூட்டமைப்பும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளதால், சர்வதேச வர்த்தகத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இது, இந்தியா உட்பட, ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும். அதனால், வளர்ச்சி விகிதம் குறையும்; அத்துடன், நுகர்வோர் நலனும் பாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் உயர்வு :
அமெரிக்காவில், 2008ல் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அதனால், வரலாறு காணாத வகையில் வட்டி விகிதம் குறைந்தது. அதன் பின், பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தோன்றியதை அடுத்து, 2015 டிசம்பரில், அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தியது. கடந்த, 2017 ஜனவரி முதல், ஐந்து முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|