பதிவு செய்த நாள்
22 ஜூலை2018
23:16

சொந்த வீடு வாங்குவது சிறந்ததா; அல்லது வாடகை வீட்டில் தொடர்வது சிறந்ததா? எனும் கேள்வி பலருக்கு இருந்தாலும், பெரும்பாலானோர் சொந்த வீடு வாங்குவதை முக்கியமாக கருதுகின்றனர். சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்ள, வீட்டுக்கடன் கைகொடுக்கும் என்றாலும், இதற்காக திட்டமிட்டு சேமிப்பதும் இலக்கை அடைய உதவும்.
முன்பணம் வேண்டும்:
சொந்த வீடு என்பது நீண்டகால பொறுப்பாகும். கடனுக்கான காலத்திற்கு மாதத்தவணை செலுத்த வேண்டியிருக்கும் என்பதோடு, வீடு வாங்கும் போது குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். இதற்கு ஏற்ற முறையில் தயாராக வேண்டும். முன் பணத்திற்கான தொகையை கையில் சேமிப்பாக வைத்திருப்பது நல்லது.
செலவுகள் என்ன?
மாதத்தவணை பட்ஜெட்டில் சுமையாக அமையாமல் இருக்க, மாதாந்திர செலவுகளை முதலில் கவனிக்க வேண்டும். அத்தியாவசிய செலவுகள் போக, தேவையில்லாத செலவுகளை கண்டறிய இது உதவும். இந்த செலவுகளை தவிர்க்க முடிந்தால், அந்த தொகை, நம் மாதாந்திர சேமிப்பாக மாறும்.
காப்பீடு பாதுகாப்பு :
நிதி திட்டமிடலில் காப்பீடு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக வீட்டுக்கடன் போன்ற பொறுப்புகளை ஏற்கும் முன் போதுமான காப்பீடு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொருத்தமான, ‘டெர்ம்’ பாதுகாப்பு ஏற்றது. காப்பீடு தவிர, ஆறு மாத அடிப்படை செலவுகளுக்கான தொகையை அவசர கால நிதியாக உண்டாக்கி கொள்ள வேண்டும்.
முதலீடு திட்டமிடல் :
அடிப்படை அம்சங்களை கவனித்த பின், முன்பணத்திற்கான சேமிப்பு மற்றும் திட்டமிடலில் ஈடுபடலாம். மாத செலவுகள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்திருப்பதால், கையில் உள்ள தொகையை பொருத்தமான நிதி சாதனங்களில் முதலீடு செய்து வரலாம். இதன் மூலம் சேமிப்பும் வளரும்; சுமையும் குறையும்.
இலக்குகளை நோக்கி :
உடனடியாக வீடு வாங்குவதாக இருந்தாலும் சரி; இப்போதைக்கு சாத்தியம் இல்லை என நினைத்தாலும் சரி, திட்டமிட்டு தயாராவது வீடு வாங்கும் இலக்கை நோக்கி முன்னேற வைக்கும். இன்று மலைப்பாக தோன்றினாலும். சில ஆண்டுகளில், சொந்த வீடு வாங்க தயாராகலாம். வீடு வாங்கும் இலக்குடன் மற்ற இலக்குகளையும் அமைத்துக் கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|