பதிவு செய்த நாள்
22 ஜூலை2018
23:22

நிதி இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும் எனில் அவை நடைமுறைத்தன்மை மிக்கதாக இருப்பது முக்கியம்.
எதிர்கால வாழ்க்கை வளமாக இருக்க ஒவ்வொருவருக்கும் நிதி திட்டமிடல் முக்கியம். நிதி திட்டமிடலை மேற்கொள்ளும் போது, அதற்கான நிதி இலக்குகளே வழிகாட்டியாக அமைகின்றன. இலக்குகளுக்கு ஏற்பவே திட்டமிடல் அமைகிறது. இதன் அடிப்படையிலேயே முதலீடு உள்ளிட்ட அம்சங்களை தீர்மானிக்க வேண்டும். நிதி இலக்குகள் விருப்பம் போல அமையலாம் என்றாலும், அவை யதார்த்தமானவையாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம். இலக்குகள் நடைமுறைத்தன்மையுடன் இருந்தால் மட்டுமே அவற்றை அடைவது சாத்தியம்.
முன்னதாக ஓய்வு!
நிதி இலக்குகளில் ஓய்வு காலத்திற்கான சேமிப்பு முக்கியமாக விளங்குகிறது. ஓய்வு காலத்தில் சீரான வருமானம் கிடைக்கும் வகையில் முதலீட்டை திட்டமிட வேண்டும். பொதுவாக, 58 வயது என்பது ஓய்வு பெறும் வயதாக கருதப்பட்டாலும், ஒரு சிலர் முன்கூட்டியே ஓய்வு பெறுவதை இலக்காக கொண்டு செயல்படுகின்றனர். 30களில் அல்லது 40களில் ஓய்வு பெற்று, விரும்பிய வகையில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் எனும் கனவும் பலருக்கு இருக்கிறது.
இதற்காக ,15 முதல் 20 ஆண்டுகள் உழைத்துவிட்டு, ஓய்வு பெற வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அறிய முடிகிறது. ஆனால், இது எந்த அளவு நடைமுறை சாத்தியம் என, பார்க்க வேண்டும். செலவுகள் அதிகரிப்பது மற்றும் வாழ்நாள் காலமும் அதிகரிப்பது ஓய்வுகாலத்திற்கு தேவையான தொகையை அதிகரிக்கிறது. எனவே, ஓய்வு முடிவை தள்ளிப்போட வேண்டியிருக்கும்.
அதிலும் குறிப்பாக, 35 வயதில் திட்டமிட்டு 45 வயதில் ஓய்வு பெறுவது கடினம். மிகவும் இளம் வயதில் ஓய்வு கால சேமிப்பை துவக்கி, தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், முன்கூட்டியே ஓய்வு பெறுவது சாத்தியமாகலாம்.
அதே போல பலரும், வசதியான வீட்டில் சொகுசாக வாழ வேண்டும் என விரும்பலாம். ஆனால் இது பட்ஜெட்டையும், மற்ற இலக்குகளுக்கான ஒதுக்கீட்டையும் பாதிக்கும். வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள கடனை நாடினால், மாதத்தவணை சுமையாக மாறலாம். எதிர்பார்ப்புகள் யதார்த்தமானதாக இருந்தால் இந்த சிக்கல் இல்லை. மேலும், முதலீட்டிற்காக இன்னொரு வீட்டை வாங்குவதாக இருந்தால், அதன் மூலம் வாடகை வருமானம் கணிசமானதாக இருக்க வேண்டும். இல்லை எனில், அந்த தொகையை வேறு பொருத்தமான சாதனங்களில் முதலீடு செய்வதே நல்லது.
ஆடம்பரம் வேண்டாம் :
பலரும், பிள்ளைகள் கல்வி மற்றும் திருமணத்திற்காக திட்டமிட்டு சேமிக்கின்றனர். உயர் கல்விக்காக செலவிடலாம் என்றாலும், திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதால் வீண் செலவு அதிகரிக்கலாம். கவுரவத்திற்காக ஆடம்பரத்தை நாடுவதை தவிர்ப்பதோடு, திருமண செலவுகளுக்கு பிள்ளைகளை பொறுப்பேற்கவும் செய்யலாம். பெரும்பாலான பிள்ளைகள் திருமணத்தின் போது கணிசமான சேமிப்பை கைவசம் கொண்டு இருக்கலாம்.
எப்படியும், ஓய்வு காலத்திற்கான தொகையை திருமணத்திற்காக செலவிட்டு, பின்னர் திண்டாடுவதை விட இது சிறந்தது. விடுமுறை கால பயண அனுபவங்கள் அவசியம் என்றாலும், அவற்றுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு சேமிப்பது நல்லது. வெளிநாட்டு பயணம் எனில் சில ஆண்டுகள் முன்னதாக திட்டமிட்டு சேமிக்க வேண்டும். அதே போல, சொகுசு கார், விலை உயர்ந்த போன் உள்ளிட்ட தேய்மானம் கொண்ட சொத்துகளில் ஆர்வம் காட்டுவதைவிட, வாழ்க்கைக்கு தேவையான இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|