பதிவு செய்த நாள்
22 ஜூலை2018
23:24
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், நிப்டி, கடந்த வாரம் பெரிய மாற்றங்கள் இல்லாமல், துவங்கிய புள்ளிகளிலேயே முடிவுற்றது.
இதற்கு முந்தைய இரு வாரங்களாக, சந்தை உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 140 புள்ளிகள் ஏற்ற, இறக்கங்களுடன், 11,010 புள்ளிகளில் வர்த்தகம் முடிவுற்றது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பெரும்பாலான பங்குகள் சரிவை சந்தித்தன. இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. ‘செபி’ கொண்டு வந்த புதிய கொள்கை முடிவு முக்கியமான ஒன்று. மேலும், ‘லார்ஜ் கேப் ஸ்மால் கேப்’ போன்ற வகைகளுக்கான புதிய வரைமுறை அறிவிக்கப்பட்டது.
பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிதி ஒதுக்கீடு மற்றும் துறை வாரியாக முதலீடு செய்வது குறித்த, செபியின் இந்த புதிய கொள்கை முடிவின் காரணமாக, பரஸ்பர நிதி நிறுவனங்கள், தங்களிடம் இருந்த பங்குகளை மொத்தமாக விற்பனை செய்ய நேர்ந்தன. இரண்டாவதாக, தேசிய பங்குச் சந்தை கொண்டு வந்த, கூடுதல் கண்காணிப்பு வழிமுறை. இதன் மூலமாக, வாங்கக் கூடிய பங்குகளில் மொத்தத் தொகையை செலுத்த வேண்டும் என்பதாலும், பல பங்குகள் இந்த கூடுதல் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதன் காரணமாகவும், பங்குகள் விலையில் பாதகமான போக்கு ஏற்பட்டது.
நிப்டி, 11,171 புள்ளி மற்றும் சென்செக்ஸ் புதிய வரலாற்று உச்சமான, 36,740 புள்ளியை எட்டியது. இந்த உயர்வுக்கு, இன்போசிஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் உந்துதலாக அமைந்தன.
டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக, தொழில்நுட்ப நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கும் என்ற கோணத்திலும், கச்சா எண்ணெய் விலை குறைவால், நம் நாட்டின் இறக்குமதி பில் தொகை குறையும் என்பதாலும் சந்தை வலுப்பெற்றது.
கடந்த வாரத்தில், பார்லிமென்டில், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று மேற்கொண்ட அமளியால், பங்குச் சந்தைகள் தடுமாறின. பின் ஏற்பட்ட சுமுகமான சூழல் மற்றும் அசாதாரண சூழல் இல்லை எனும் நிலை, இனி சந்தைக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்தைப் பொறுத்தவரை, நிப்டியின் முதல் ரெசிஸ்டென்ட், 11,270 மற்றும் 11,240. சப்போர்ட் 10,920.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|