பதிவு செய்த நாள்
22 ஜூலை2018
23:30

உலக அளவில், குறியீடு சார்ந்த முதலீடுகள், மிக அதிகமாக வளர்ந்து வரும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். அப்படிப்பட்ட முதலீட்டு முறைகளில் ஒன்று, ஈ.டி.எப்.
ஈ.டி.எப்., என்று அழைக்கப்படும் இந்த முதலீட்டு முறையின் முழுப் பெயர், ‘எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு’ என்பதாகும். அமெரிக்க பங்குச் சந்தையில், இந்த வகை முதலீடுகள், வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளன. மியூச்சுவல் பண்டுகளை விட, இந்த ஈ.டி.எப்., முதலீட்டை, உலக முதலீட்டாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
கடந்த, 15 ஆண்டுகளில், ஈ.டி.எப்., ஒரு தனிப் பெரும் தொழிலாகவே வளர்ந்துள்ளது என்றால், அது நிச்சயம் மிகையில்லை. 2005ல், உலக அளவில், 417 பில்லியன் டாலராக இருந்த இந்த, ஈ.டி.எப்., முதலீடுகள், 2017ம் ஆண்டில், 4.4 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளன.
எதிர்பார்ப்பு :
அதாவது, 12 ஆண்டுகளில், 21சதவீதம் அளவுக்கு, ஒட்டு மொத்த கூட்டு வளர்ச்சி கண்டுள்ளது, இந்த ஈ.டி.எப்., முதலீடுகள். இன்றைய சூழலில், உலக முதலீட்டு தொழிலையே விழுங்கிவிடும் அளவுக்கு, ஈ.டி.எப்., நிதிகள் வளர்ந்து வருகின்றன. நிதி மேலாண்மை தொழில், இந்த, ஈ.டி.எப்.,களின் அபரிமிதமான வளர்ச்சியை ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளது.
இதற்கு, பல காரணங்கள் உள்ளன. முக்கிய காரணங்களாக சொல்ல வேண்டியவை, அவற்றின் எளிமையும், வெளிப்படைத் தன்மையும், நிர்வாகச் செலவுகளும் ஆகும்.இந்தியாவிலும், ஈ.டி.எப்., வளர்ந்து வரும் ஒரு முதலீட்டு முறையாகவே இருக்கிறது. ஆனாலும், இன்றைய சூழலில், மியூச்சுவல் பண்டு முதலீடுகளோடு ஒப்பிடும் அளவுக்கு, ஈ.டி.எப்., வளர்ச்சி தற்போது இல்லை. ஆனால், வருங்காலத்தில், அவற்றின் வளர்ச்சி, மியூச்சுவல் பண்டையும் விஞ்சும் என்பதே எதிர்பார்ப்பு.
இதன் வெளிப்பாடாகவே, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களே முன்வந்து, இந்த வகை முதலீடுகளின் விற்பனையை துவங்கி உள்ளன. அரசின் பங்கையும் இதில் குறிப்பிட வேண்டும். அரசின் பங்கு விற்பனை திட்டங்களில், இரண்டு ஆண்டு களாக, ஈ.டி.எப்., முறையை பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளோம். சி.பி.எஸ்.இ., என்று அரசு விற்பனை செய்த, ஈ.டி.எப்., பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. தொடர்ந்து பல, ஈ.டி.எப்., திட்டங்களை கொண்டுவர அரசு ஆர்வம் காட்டுகிறது. இந்த முயற்சிகளின் தொடர் வெற்றியில், யாருக்கும் சந்தேகமில்லை.
நம்பிக்கை :
நாளைய சூழலில், அரசு நிறுவன மதிப்பு கூடும்பட்சத்தில், அதன் பலன்கள், இந்த ஈ.டி.எப்., திட்டத்தில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களை சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். உருவாகும் சீர்திருத்த மாற்றங்களின் பலன்கள், நாட்டின் முதலீட்டு கலாசாரத்தையும் வளர்க்கும் வகையில் அமையும் என்கிற நம்பிக்கையும் இதில் அடக்கம்.
ஆனாலும், இந்த முதலீட்டு முறையை பற்றிய பேச்சும், புரிதலும் உரிய அளவு மக்களை சென்றடையவில்லை. மியூச்சுவல் பண்டின் அளவுக்கு, ஈ.டி.எப்., வளர்ச்சி காணும் சூழல் உருவாக வேண்டும். அதற்கான அடித்தள பணிகள் மட்டுமே இப்பொது நடந்து வருகின்றன. இனி வரும் காலங்களில், ஈ.டி.எப்., முதலீடுகள், சேமிப்பின் முக்கிய அங்கமாக மாறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|