பதிவு செய்த நாள்
26 ஜூலை2018
23:26

புதுடில்லி : வணிகர்கள் மிகச் சுலபமாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்ய உருவாக்கியுள்ள புதிய வரைவு படிவம், வரும், 30ம் தேதி வெளியிடப்படுகிறது.
தற்போதுள்ள, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் நடைமுறையில், கடும் சிரமத்தையும், அதிக செலவையும் சந்தித்து வருவதாக, வரி செலுத்துவோர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஒரு நிறுவனம், மாதம் மூன்று முறை வீதம், ஆண்டுக்கு, 36 முறை கணக்கு தாக்கல் செய்கிறது. அத்துடன், ஆண்டின் மொத்த வணிக விபர கணக்கையும் சேர்த்து, ஓராண்டில், 37 முறை கணக்கு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.
இதை குறைத்து, ஓராண்டில், 13 முறை கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தயாரிக்கப்பட்ட புதிய வரைவு கணக்கு தாக்கல் படிவத்திற்கு, கடந்த வாரம் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கருத்து கூறலாம் :
இது குறித்து, ஜி.எஸ்.டி., ஆணையர் உபேந்திர குப்தா கூறியதாவது: தற்போது உள்ள, ‘ஜி.எஸ்.டி.ஆர் – 1 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர் – 3பி’ கணக்கு தாக்கல் படிவங்களுக்கு மாற்றாக, புதிய வரைவு படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு தாக்கல் வரைவு படிவம், 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதில், ஒரு வணிகர், ஒரு காலாண்டில், கொள்முதல் அல்லது விற்பனையில் ஈடுபடாத பட்சத்தில், அதை, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. புதிய வரைவு கணக்கு தாக்கல் படிவம் குறித்து, வரி செலுத்துவோர் அனைவரும், ஒரு மாதத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம்.
அவற்றை, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிசீலித்து, இறுதி வடிவம் கொடுக்கும். இது தொடர்பான, ஜி.எஸ்.டி., சட்ட திருத்தங்களுக்கு, நடப்பு பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரிலேயே ஒப்புதல் பெறப்படும்.இதை தொடர்ந்து, மாநில அரசுகள், சட்டசபைகளில், ஜி.எஸ்.டி., சட்ட திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்.
இதையடுத்து, ஜி.எஸ்.டி., சட்ட திருத்தத்தின் கீழ், 2019, ஜன., 1 முதல், மிகச் சுலபமான, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் நடைமுறை, அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.எஸ்.டி., சட்டத்தில் செய்யப்பட உள்ள திருத்தங்கள்:
l புதிய, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் நடைமுறை
l ஜி.எஸ்.டி.,யில், ‘காம்போசிட்’ திட்டத்தில் இணைவதற்கான விற்றுமுதல், ஒரு கோடியில் இருந்து, 1.50 கோடி ரூபாயாக நிர்ணயம்
l ‘ரிவர்ஸ் சார்ஜ்’ திட்டத்தில், பொருட்கள் கொள்முதல் செய்வோரை பங்கேற்கச் செய்வது
l ஒரு நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகங்களுக்கு தனித் தனியாக, ஜி.எஸ்.டி., பதிவு
l ஜி.எஸ்.டி., பதிவை ரத்து செய்தல்
l பல்வேறு விலைப்பட்டியல்களுக்கு, ஒருங்கிணைந்த, ‘டெபிட் – கிரெடிட்’ நோட்டுகள் வழங்குதல்
தாமத கட்டணம் ரத்து :
கடந்த, 2017 ஜூலைக்கு முன், கலால், சேவை, மதிப்பு கூட்டு வரி விதிப்பின் கீழ் செயல்பட்ட வர்த்தகர்களும், நிறுவனங்களும், உரிய படிவத்தை பூர்த்தி செய்து, ஆக., 31க்குள், ஜி.எஸ்.டி., திட்டத்திற்கு மாறலாம். அத்தகையோருக்கு, கணக்கு தாக்கல் தாமதக் கட்டணம் ரத்து செய்யப்படும். அத்துடன், உள்ளீட்டு வரிப் பயனை பெறவும் வாய்ப்புள்ளது என, ஜி.எஸ்.டி., ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|