பதிவு செய்த நாள்
06 ஆக2018
00:08

வட்டி விகிதம் உயரத்துவங்கியிருந்தாலும், வீட்டுக்கடனை முன்னதாகவே அடைக்க முயல்வதை விட வரிச்சலுகையை பயன்படுத்திக்கொள்வதே சிறந்ததாக இருக்கும்.
ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ விகிதத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக,வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல வங்கிகள் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள சூழலில், 2013ம் ஆண்டுக்குப்பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியிருப்பது, வட்டி விகிதம் மேலும் உயரும் என்பதை உறுதியாக்கியுள்ளது. இதனால், வீட்டுக்கடன் பெற்றவர்கள் கவலை அடைந்து உள்ளனர். வட்டி விகித உயர்வை சமாளிப்பதற்கான வழிகளை ஆராயத்துவங்கி உள்ளனர்.
உடனடி பாதிப்பில்லை
வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் உயரும் என்றாலும், ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கு, இதனால் உடனடி பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எம்.சி.எல்.ஆர் விகித முறையில் கடன் பெற்றவர்களைப்பொறுத்தவரை, வட்டி விகிதத்திற்கான ரிசெட் காலம் வரை பழைய விகிதமே தொடரும், அதன் பிறகு வட்டி விகிதம் உயரும். புதிதாக கடன் பெறுபவர்கள், அதிக வட்டி விகித்தில் கடன் பெற வேண்டியிருக்கும்.
தற்போது வீட்டுக்கடனை செலுத்தி வருபவர்கள், ரீசெட் காலத்திற்கு பின், புதிய வட்டி விகிதத்தை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும். வீட்டுக்கடனை குறைந்த வட்டி விகிதம் அளிக்கும் வேறு வங்கிக்கு மாற்றுவது பலன் தருமா? என, பரீசிலிக்கலாம். கடன் சுமையை குறைக்க வாய்ப்பிருந்தால், பகுதி அளவு கடன் தொகையை முன்கூட்டியே செலுத்தலாம்.
பொதுவாக கடனுக்கான முதல் பாதி காலத்தில் இருப்பவர்களுக்கு, இந்த உத்தி அதிக பலன் தரும் என, கருதப்படுகிறது. கடனுக்கான முதல் பாதி காலத்தில் செலுத்தப்படும் தொகை, நீண்ட கால நோக்கில், வட்டியில் அதிக சேமிப்பை அளிக்க கூடியது.வீட்டுக்கடன் பெற்றவர்களில் பலர், முன்கூட்டியே கடனை அடைத்துவிட்டு வெளியேறும் வாய்ப்பையும் பரிசீலிக்கலாம். கடனை முன்னதாக அடைப்பது சுமையை குறைக்கும் என்றாலும், வீட்டுக்கடன் அளிக்கும் வரிச்சலுகையை மனதில் கொண்டே இந்த முடிவை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
வீட்டுக்கடனுக்காக செலுத்தப்படும், வட்டியில், 2 லட்சம் ரூபாய்வரை வருமான வரிச்சலுகை கோரும் வாய்ப்புள்ளது. கடனை முன்னதாக அடைப்பதால் இந்த வாய்ப்பை இழக்கலாம். மாறாக கடனை தொடர்வதன் மூலம் வரிச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வரிச்சலுகை
வீட்டுக்கடன் மூலமான வரிச்சலுகையை பயன்படுத்திக்கொள்ளும் போது, வரி விலக்கிற்கு என, தனியே முதலீடு செய்யும் தேவை இருக்காது. அந்த தொகையை அதிக பலன் தரக்கூடிய நிதி சாதனங்களில் முதலீடு செய்வதன் முலம், நீண்ட கால நோக்கில் கடனுக்கான வட்டிச்சலுகையை பெறுவதோடு, முதலீட்டின் மீதும் அதிக பலன் பெறலாம் என, நிதி ஆலோசகர்கள் கருதுகின்றனர்.
தவிர, கடனுக்கான வட்டி விகிதம் உயரும் சூழலில், வைப்பு நிதி, சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் உயரும் நிலை உள்ளது. அதிகம் ரிஸ்கை விரும்பாத, ஆனால் நிலையான பலனை எதிர்பார்க்கும் முதலீட்டாளர் எனில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வட்டி விகித உயர்வை சாதகமாக்கி கொள்ளலாம்.எனவே, வரிச்சலுகைக்கு தேவையான கடன் அளவை கணக்கிட்டு, அதற்கு மேல் உள்ள தொகையை முன்கூட்டிய செலுத்துவது சிறந்த உத்தியாக இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|