பதிவு செய்த நாள்
06 ஆக2018
00:10

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெயின் விலை, கடந்த நான்கு மாதங்களாக, அதிகப்படியான ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருகிறது.
சீனா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுடனான அமெரிக்காவின் வர்த்தக மோதல், ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை, சவுதி அரேபியாவின் சிவப்பு கடல் பகுதியில், போராளிகளின் தாக்குதலால் ஏற்பட்ட ஏற்றுமதி பாதிப்பு, அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு போன்றவை காரணங்களாக அமைந்து, விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ஈரான் நாட்டிலிருந்து, எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று, அனைத்து இறக்குமதி நாடுகளையும், கடந்த மாதம், அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இதைத் தொடர்ந்து, இந்தியாவும் இறக்குமதியை குறைத்துள்ளது.ஆனால், அமெரிக்காவின் வலியுறுத்தலை ஏற்றுக் கொள்ளாமல், சீனா தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான, அசாதாரண சூழல் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்க எண்ணெய் உற்பத்தி அதிகரித்து வந்தாலும், இறக்குமதியை சீனா குறைத்து வருவதால், அமெரிக்க எண்ணெய் ஏற்றுமதியில் கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளது.ஜூலை, 27-ம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வார காலத்தில், அமெரிக்காவின் எண்ணெய் இருப்பு அதிகரித்து காணப்பட்டது.
மேலும், உலகின் முதல் மற்றும் இரண்டாம் உற்பத்தி நாடுகளான சவுதி அரேபியாவும், ரஷ்யாவும், கணிசமாக உற்பத்தி அதிகரிப்பு ஈடுபட்டு வருகிறது. இதனால், மொத்த உற்பத்தி, தினசரி, 3 லட்சம் பேரலாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே, கச்சா எண்ணெய் விலை உயர்வு, கட்டுக்குள் இருந்து வருகிறது.
தங்கம் வெள்ளி
சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை, இந்த ஆண்டு தொடக்கம் முதலே, சரிவில் வர்த்தகமாகி வந்தது. இதற்கு, அமெரிக்க நாணயத்தின் மதிப்பு உயர்வு, ஆபரண தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இறக்குமதி குறைந்தது ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.
உலக தங்க கவுன்சில், நடப்பு ஆண்டின் முதல் பகுதியான, ஜனவரி முதல் ஜூன் காலகட்டத்தில், தங்கத்தின் தேவை, உலக அளவில், 6 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது, 2009க்கு பின் ஏற்பட்ட முதல் வீழ்ச்சியாகும்.மேற்கூறிய காரணங்களால், தங்கம் விலை சரிந்து இருப்பினும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 7 சதவீதம் குறைந்ததன் காரணமாக, சர்வதேச சந்தையோடு ஒப்பிடும்போது, நம் உள்நாட்டு சந்தையில், விலை வீழ்ச்சி அடையவில்லை; மாறாக, சிறிதளவு ஏற்றம் கண்டு வர்த்தகம் ஆகிறது.
தற்போது, 1 அவுன்ஸ் தங்கம் விலை, 1,200 டாலர் என்பது நல்ல சப்போர்ட்டாக உள்ளது. கடந்த வாரம், அமெரிக்க நாட்டின் வேலையில்லாதோர் குறித்த புள்ளி விபரம் வெளிவந்தது. இது, எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்ததால், அமெரிக்க நாணயத்தின் மதிப்பு குறைந்தது. இதன் காரணமாக, வெள்ளியன்று, தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்தது. இந்நிலை, இந்த வாரத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஆபரண தங்கம் இறக்குமதி, கடந்த ஆண்டு, 927 டன் ஆகும். 2013ம் ஆண்டுடன் இதை ஒப்பிடும் போது, 4.4 சதவீதம் குறைவு. இந்த ஆண்டும் இறக்குமதியில் தொய்வு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பு
செம்பு விலை, கடந்த ஆண்டு உயர்வுக்குப் பின், இந்த ஆண்டு, ஆரம்பம் முதலே சரிவில் வர்த்தகமாகி வருகிறது. உலக நாடுகளுக்கு இடையே நிலவும் அசாதாரண சூழல் மற்றும் பொருளாதார மந்தநிலை, வர்த்தக மோதல் ஆகியவை இதற்கு காரணமாகும்.
சீனாவின் தேவையை அடிப்படையாகக் கொண்டு, செம்பின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.கடந்த வாரம், வெள்ளியன்று, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு, 60 மில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி வரிகளை, சீனா புதிதாக அறிவித்தது. குறிப்பாக இயற்கை எரிவாயு, செம்பு, நிக்கல், ஜிங்க் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக, வெள்ளியன்று, செம்பு விலை அதிகரித்தது. இது வரும் நாட்களிலும் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|