பதிவு செய்த நாள்
06 ஆக2018
00:12

இந்திய பங்குச் சந்தைகள், தொடர்ந்து வரலாற்று உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றன. தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்களும், அதன் வரலாற்று உச்சத்தில் வர்த்தகமாகின்றன.
தென் மேற்கு பருவ மழை, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், சராசரிக்கும் மேலாக பெய்து வருகிறது. நிறுவனங்கள், முதல் காலாண்டு நிதி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்களின் ஆதாயம், முந்தைய காலத்தைக் காட்டிலும் உயர்ந்துள்ளது. இவை எல்லாம் சந்தைக்கு சாதகமாக அமைந்தன.மேலும், கச்சா எண்ணெய் விலை, கடந்த இரு வாரங்களாக, பெரிய ஏற்றம் இல்லாமல், சரிந்து வர்த்தகம் ஆவதும், சந்தை உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது.
வங்கி பங்குகள், கமாடிட்டி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள், விலை அதிகரித்து காணப்பட்டன. சில முக்கிய நிறுவனங்களான, ‘ஐ.டி.சி., இண்டியா புல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ், ஆக்சிஸ் பேங்க், வேதாந்தா’ போன்ற பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
மேலும், இந்திய சேவை துறையின் வளர்ச்சி விகிதமும், சந்தையின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது. சேவை துறையின் வளர்ச்சி, 2016 அக்டோபர் மாதத்தை விட உயர்ந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.சர்வதேச சந்தையில், பங்குகளின் விலையில் அதிக அளவில் மாற்றங்கள் காணப்படவில்லை.
அமெரிக்கா – சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்து வரும் வர்த்தக மோதல் சூழலில், கடந்த வெள்ளி அன்று, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 60 மில்லியன் மதிப்புள்ள இறக்குமதி வரியை, புதிதாக சீனா அறிவித்தது. இதில் இயற்கை எரிவாயு, செம்பு உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கும்.
கடந்த வாரம் நடைபெற்ற, ரிசர்வ் வங்கியின் வட்டி விகித கூட்டத்தில், ரெப்போ விகிதம், 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.இந்த வாரம், நிப்டி, முந்தைய உயர்வான, 11,390 என்ற நிலையைக் கடந்து வர்த்தகமாகும் சூழலில், 11,450 மற்றும் 11,500 ஆகிய இலக்குகளை அடைய வாய்ப்பு உள்ளது. சப்போர்ட், 11,170 ஆகும்.
முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|