பதிவு செய்த நாள்
06 ஆக2018
00:18

இந்திய, ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை மீண்டும் கால் சதவீதம் உயர்த்தியுள்ளது, பல செய்திகளைச் சொல்கிறது. இந்த நிதியாண்டுக்குள், இன்னும் ஒரு முறையாவது ரெப்போ விகிதம் உயரலாம் என்பது எதிர்பார்ப்பு.
மத்திய, ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு வசூலிக்கும் வட்டியே ரெப்போ விகிதம். இந்த நிதியாண்டில், இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி, கால் சதவீதம் ரெப்போ வட்டியை உயர்த்த, அது தற்போது, 6.50 சதவீதமாக உள்ளது.
கடந்த, 2013க்குப் பின், இப்போது தான் தொடர்ச்சியாக இரண்டு முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதைப் பொருளாதார நிபுணர்களும், பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் எதிர்பார்த்து தான் இருந்தனர். அதனால், சந்தையில் பெரிய அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை.ஆனால், இதை வேறு மாதிரியாக புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
வட்டி விகித உயர்வுக்கு, ஆறு காரணங்கள் முக்கியமானவை. அவை:
பணவீக்கம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவது; அப்படி உயர்ந்து, அது பொருளாதாரத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன், முன்னெச்சரிக்கையாக தடுத்துவிடத் துடிக்கும் ரிசர்வ் வங்கி; சம்பா பருவ பயிர்களுக்கு வழங்கப்படவுள்ள குறைந்தபட்ச ஆதார விலையில் உயர்வு.
பணவீக்கம்
பல மாநிலங்களில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய காட்டப்படும் முனைப்பு; கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழல்; டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது.பணவீக்கம் முக்கியமானது. அதை, 4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் எண்ணம். ஆனால், அது மேலே குறிப்பிட்ட பல காரணங்களால், தொடர்ந்து கட்டுப்பாடற்று இருக்கிறது.
உர்ஜித் படேல் கூற்றின்படியே, இந்த நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில், பணவீக்கம், 4.8 சதவீதத்தை தொடும். அடுத்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் அது, 5 சதவீதத்தையும் தொடும்.பணவீக்கம் கட்டுக்குள் இல்லையென்றால், எவ்வளவு வரவு வந்தாலும் அது போதாது. பல்வேறு பொருட்கள், சேவைகளின் மீது, பணவீக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இதை எப்படியாவது கட்டுப்படுத்தியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கிறார், உர்ஜித் படேல்.
அதற்குத்தான் இந்த ரெப்போ விகித உயர்வு. இதன் மூலம், மக்களிடையே பணப்புழக்கம் குறையும். அதனால், பணத்தின் மதிப்பு உயரும்; விலைவாசி கட்டுக்குள் இருக்கும்.குறிப்பாக, சம்பா பருவ பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை, நாட்டில் பணவீக்கத்தை அதிகப்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.
விவசாயிகளிடம் பணப்புழக்கம் அதிகரித்தால், அது ஒரு பக்கம் சுபிட்சம் தான். மறுபக்கம், பல பொருட்களின் விலைகள் உயரும். அப்படி ஒரு சூழல் ஏற்படாமல் இருக்கவே, முன்கூட்டியே ரெப்போ வட்டியை உயர்த்தி காபந்து செய்திருக்கிறார், உர்ஜித் படேல்.
இன்னொரு முக்கிய காரணம், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே உயர்ந்து வரும் வர்த்தகப் போர் அபாயம். அது, எப்படிப்பட்ட பாதிப்பை இந்தியா மீது ஏற்படுத்தும் என்பதில் தெளிவில்லை. ஆனால், ஒருவித இணக்கமற்ற சூழல் ஏற்பட்டு, ஏற்றுமதிகள் மேலும் சரியுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதை மனதில் கொண்டும், ரெப்போ வட்டி உயர்வு செய்யப்பட்டுள்ளது.
விமர்சனங்கள்
ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ போன்ற பல நிதிக் கருவிகளை வைத்துக் கொண்டிருக்கும் மத்திய ரிசர்வ் வங்கிக்கு, இது சர்க்கஸ் போன்றது. நிதி நிலைமையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்; வளர்ச்சியும் பாதித்துவிடக் கூடாது. அதற்குத் தேவையான முதலீடுகள் கிடைக்க வேண்டும். இதையெல்லாம் யோசித்தே, ரிசர்வ் வங்கி, இத்தகைய கூட்டல், குறைத்தல்களை செய்து சமாளிக்கிறது.
இப்போதே எதற்கு இவ்வளவு வட்டி உயர்த்தப்பட வேண்டும்? இன்னும் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளைப் போய் சேரவே இல்லை. பணவீக்கம் பற்றி ரொம்பவும் கவலைப்பட வேண்டுமா? வளர்ச்சி தானே முக்கியம்? பணவீக்கம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை. 5 சதவீதம் வரை பணவீக்கம் போனாலும் கவலைப்பட வேண்டாம்.
அதை பிற்காலத்தில் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். எதற்கு இப்படி தொடை நடுங்க வேண்டும் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
ரெப்போ விகித உயர்வை பரிந்துரைத்த, நிதிக் கொள்கை குழுவுக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்? நிச்சயம் தெரிந்தே இருக்கும். அப்படியும் முன்கூட்டியே தயாரிப்போடு இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. இப்படியே விட்டுவிட்டால், தேவையற்ற பொருளாதாரக் குமிழ் உருவாகிவிடும்.
ஏற்கனவே ரியல் எஸ்டேட் துறையில் அதுதான் நடந்துள்ளது. விலைகள் கற்பனைக்கு எட்டாத உயரத்துக்குப் போய்விட்டன. மக்களுடைய வாங்கும் சக்திக்கு மேல் பல மடங்கு உயர்வு. விளைவு, அந்தத் துறையில் பெரும் தேக்கம். இதற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று, பணவீக்கம்.
என்ன செய்யலாம்?
நம்மைப் போன்ற மத்தியமர்கள் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எப்படி சமாளிக்கலாம்?புதிய வீட்டுக் கடனுடைய வட்டி விகிதம் உயர்ந்துவிடும். அதனால், சமாளிக்க முடிந்தால் மட்டுமே புதிய வீடு வாங்குங்கள்.ஏற்கனவே கடன் கட்டிக் கொண்டிருப்பவர்கள், தங்கள் மொத்த கடன் காலத்தின் முதல் பாதியில் இருந்தால், அவ்வப்போது பணம் திரட்டி, பிரின்சிபல் தொகையை பகுதியளவேனும் செலுத்திவிடுங்கள்.
நம்பிக்கை
இனிமேல் வட்டிகள் தொடர்ச்சியாக உயரக்கூடிய சமிக்ஞை தான் தெரிகிறது. முதல் பாதியில் இருந்தால், இ.எம்.ஐ.,யில், வட்டிக்கான பகுதி தான் கூடுதலாக இருக்கும். அதனால் இப்போதே உஷாராகிக் கொள்ளுங்கள்.சேமிப்புகளுக்கான வட்டி விகிதமும் உயரும். கூடுதல் வருவாய் எதிர்பார்த்து பரஸ்பர சகாய நிதிக்கோ, பங்குச் சந்தைக்கோ போனவர்கள், கொஞ்ச நாளைக்கு மீண்டும் வங்கிச் சேமிப்புகளுக்கு வந்துவிடலாம்.
இதேபோல், சிறுசேமிப்புகளுக்கான வட்டிகளும் உயர வாய்ப்புண்டு. ரொம்ப ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், பி.பி.எப்., – என்.எஸ்.சி., பத்திரங்கள், செல்வமகள் சேமிப்பு திட்டம், அஞ்சலக சேமிப்புகள் என்று கொஞ்சம் பாதுகாப்பாக ஒதுங்கிக் கொள்ளலாம்.உர்ஜித் படேல் தெரிவித்த ஒரு விஷயம் முக்கியமானது. மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு, 7.4 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பை அவர் மாற்றவில்லை. ஆக, வளர்ச்சிக்கு பாதிப்பில்லை. நம்பிக்கை தரும் விஷயம் இது ஒன்று தான்.
ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|