பதிவு செய்த நாள்
11 ஆக2018
00:24

புதுடில்லி:ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கையை அங்கீகரிக்க, ‘ஆடிட்’ குழு மறுத்துள்ளதால், அதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நரேஷ் கோயல் தலைமையிலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 2017- – 18ம் நிதியாண்டின், ஜனவரி – மார்ச் காலாண்டில், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை சந்தித்தது.இழப்பு, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
கிசுகிசு
அதற்கேற்ப, ஜெட் ஏர்வேஸ், அதன் விமானிகள்,பொறியாளர்கள் ஆகியோரிடம் ஊதியத்தை குறைத்துக் கொள்ள கோரியதாக தகவல் வெளியானது. மேலும், 60 நாட்களுக்கு மட்டுமே விமான சேவையை இயக்குவதற்கான நிதி உள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.இந்த தகவல்களை மறுத்த ஜெட் ஏர்வேஸ், ஆக., 9ல் பங்குதாரர்களின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், கடந்த நிதியாண்டின் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும் என, அறிவித்தது. ஆனால் அவ்வாறு வெளியிடப்படவில்லை.
இது குறித்து, மும்பையில் நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில், நரேஷ் கோயல் பேசியதாவது:சர்வதேச நிலவரங்கள் காரணமாக, நிறுவனத்தின் செலவினம் கையை மீறி போய் விட்டது. கச்சா எண்ணெய் விலை, 16 சதவீதம் உயர்ந்துள்ளது.இதன் தாக்கத்தால், விமான எரிபொருள் செலவினம் அதிகரித்துள்ளது. அத்துடன், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவால், வருவாய் குறைந்துள்ளது.
இத்தகைய சுமையை, நுகர்வோர் தலையில் சுமத்த முடியாத நிலையில், விமான துறையில் போட்டி நிலவுகிறது. அதனால், விமான பயணக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை.
பங்கு விலை
இந்நிலையில், கடந்த நிதியாண்டின் நிதி நிலை அறிக்கையில், ஒரு சில அம்சங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. இதன் காரணமாக, தணிக்கை செய்யப்பட்ட, கடந்த நிதியாண்டின் நிதி நிலை அறிக்கையை, ஆடிட் குழு, நிறுவனத்தின் இயக்குனர் குழுவுக்கு பரிந்துரைக்கவில்லை.அதனால், நிதி நிலை அறிக்கையை வெளியிடவில்லை. விரைவில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு, நிதி நிலை அறிக்கை வெளியிடும் தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று, மும்பைபங்குச் சந்தையில், ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 13.3 சதவீதம் சரிவடைந்து, 261.60 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.
பிரச்னைகள்
மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:வருவாய் அல்லது செலவினத்தில், சில பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். உதாரணமாக, வட்டிச் செலவினங்களில் இது போல நடக்கலாம். ஒரு நிறுவனம், இழப்பை தெரிவிக்க விரும்பாத பட்சத்தில், அதற்கு ஆடிட் குழு ஒப்புதல் அளிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.
இரண்டு நிறுவனங்கள்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வரவு – செலவு கணக்கை, பி.எஸ்.ஆர்., அண்ட் கோ மற்றும் டி.டி.எஸ்., அண்ட் அசோசியேட்ஸ் என்ற நிறுவனங்கள் தணிக்கை செய்கின்றன. அதை, நிறுவனத்தின் மூன்று இயக்குனர்கள் அடங்கிய, ஆடிட் குழு, இயக்குனர் குழுவுக்கு பரிந்துரைக்கும். அதன் பின்னரே, பங்குதாரர்கள் கூட்டத்தில், நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும்.
பாதகமா?
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், பங்குதாரர்களுக்கு பாதகமான செய்தியை தெரிவிக்க விரும்பாமல் இருக்கலாம் அல்லது அத்தகைய தகவலை மறைக்கநினைத்திருக்கலாம்.
ஸ்ரீராம் சுப்ரமணியம், ‘இன்கவர்ன் ரீசர்ச்’
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|