பதிவு செய்த நாள்
24 ஆக2018
06:36

மும்பை : ஒரு வாரத்திற்கு பின், நேற்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, மீண்டும், 70ஐ தாண்டி சரிவடைந்தது.
நேற்று முன்தினம், அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாட்டின் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் வளர்ச்சி கண்டு வரும் சூழலில், வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தலாம் என, தெரிவிக்கப்பட்டது.
இதனால், முதலீட்டாளர்கள், வளரும் நாடுகளில் இருந்து முதலீடுகளை திரும்பப் பெறத் துவங்கி உள்ளனர். நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அன்னியச் செலாவணி சந்தைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று, அன்னியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் துவங்கியதும், முந்தைய வர்த்தக தினத்தில், 69.81 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, 70.03 ஆக வீழ்ச்சி கண்டது. கடந்த, 16ம் தேதி, ரூபாய் மதிப்பு, வர்த்தகத்தின் இடையே, வரலாறு காணாத வகையில், 70.40 ஆக வீழ்ச்சி கண்டது. இதையடுத்து, படிப்படியாக ரூபாய் மதிப்பு உயர்ந்து, 70 ரூபாய்க்குள் வர்த்தகமாகி வந்தது.
இறக்குமதியாளர்கள் அதிக அளவில் டாலர்களை வாங்கி வருவதாலும், அமெரிக்க மத்திய வங்கி, வட்டியை மீண்டும் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதாக, அன்னியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பங்குச் சந்தைகளில் ஏற்றம் :
நேற்று, மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இடையே, ‘சென்செக்ஸ்’ குறியீடு, முதன் முறையாக, 38,487.63 புள்ளிகளை எட்டியது. வர்த்தகத்தின் இறுதியில், 51.01 புள்ளிகள் உயர்வுடன், 38,336.76 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 11.85 புள்ளிகள் உயர்ந்து, 11,582.75 புள்ளிகளுடன், புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு முன், 21ம் தேதி, 11,570.90 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|