பதிவு செய்த நாள்
24 ஆக2018
23:23

மும்பை : ‘எல் அண்டு டி’ நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டத்தில், முதலீட்டாளர்கள் கேட்ட கேள்விகளால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனை :
இந்நிறுவனத்தின், 73வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில், எல் அண்டு டி நிறுவனத்தின் செயல் சாரா தலைவர், ஏ.எம்.நாயக், புற்றுநோயால் மறைந்த தன் பேத்தி நினைவாக கட்டப்படும் மருத்துவமனை குறித்து, உதய் தீக் ஷித் என்ற முன்னாள் ஊழியர் கேள்வி எழுப்பினார். ‘‘எல் அண்டு டி நிறுவனத்தின் தொழிற்சாலைக்காக வாங்கிய இடத்தை, மருத்துவமனை மற்றும் குடியிருப்புக்காக எப்படி ஒதுக்கலாம்?’’ என, உதய் தீக் ஷித் கேட்டார்.
அப்போது, ‘‘மருத்துவமனை, நிறுவனத்தின் பாரம்பரிய பெருமையை நிலைநாட்டும்,’’ என, ஏ.எம்.நாயக் தெரிவித்தார். அதில் திருப்தி அடையாமல், தீக் ஷித் உள்ளிட்ட சில பங்கு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பேசினர். அப்போது, எல் அண்டு டி நிர்வாக இயக்குனர், எஸ்.என்.சுப்ரமணியன் குறுக்கிட்டு, ‘‘அனைத்து விதிமுறைகளின் படி, மருத்துவமனை கட்டுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
‘‘இந்த மருத்துவமனையில், எல் அண்டு டி ஊழியர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் மருத்துவ சேவை பெறலாம்,’’ என்றார். அதை ஏற்காமல், சில பங்கு முதலீட்டாளர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனால், பொறுமையிழந்த நாயக், ‘‘இது, பங்கு முதலீட்டாளர்களின் கூட்டம். தனிப்பட்ட பிரச்னைகளை இங்கு கொண்டு வர முடியாது. மற்றவர்கள் பேசட்டும்; தொடர்ந்து இடையூறு செய்வோர், காவலர்கள் மூலம் வெளியேற்றப்படுவர்,’’ என, எச்சரித்தார். இது, கூட்டத்தினரை மேலும் எரிச்சல் ஊட்டியது.
நான்கு முறை போனஸ் :
நிலைமை மேலும் மோசமாவதை தடுக்க, சுப்ரமணியன் குறுக்கிட்டு பேசினார். நாயக், நிறுவனத்தில், 52 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் ஆற்றிய சேவைகளை எடுத்துக் கூறி, நான்கு முறை போனஸ் வழங்கியது; தற்போது, 9,000 கோடி ரூபாய்க்கு பங்குகளை திரும்பப் பெறுவது, டிவிடெண்டு வழங்குவது உள்ளிட்டவற்றை எடுத்து உரைத்தார்.
அப்போதும் அடங்காத சில முதலீட்டாளர்கள், ‘பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், பங்குகளை அளிக்க விருப்பமில்லை’ என, கோஷமிட்டனர். இதையடுத்து, ‘‘சர்ச்சைக்குரிய நிலம், நிறுவனம் வசமே இருக்கும். அனைத்து ஆவணங்களையும், முதலீட்டாளர்கள் பார்வையிடலாம்,’’ என, சுப்ரமணியன் கூறி, களேபரத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|