பதிவு செய்த நாள்
26 ஆக2018
23:38

வங்கி வைப்பு நிதிகள் மீது, மத்தியமர்களுக்குத் தீராக் காதல் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக, வங்கி சேமிப்புகளுக்கு கிடைத்து வந்த வட்டி விகிதம் மிகவும் குறைவு. தற்போது, ஒரு சில பெரிய பொதுத் துறை, பன்னாட்டு வங்கிகள் லேசாக வட்டியை உயர்த்தியுள்ளன. ஆனால், இவை தருவதை விட, புதிய வகை வங்கிகள் கூடுதல் வட்டியை வழங்குகின்றன. அவை பாதுகாப்பானவையா...
இந்தியாவில் முதலீடு செய்யும் மத்தியமர்களுக்கு லேசான பயம் உண்டு. அவர்களது சேமிப்புகள் மிகச் சிறியவை. தேவைப்படும் போது அவற்றை எடுத்து பயன்படுத்த வேண்டும். பல ஆண்டுகள் வங்கிகளில் போட்டு வைத்திருக்கவும் முடியாது. அடுத்த சில ஆண்டுகளிலேயே, ஏதேனும் ஒரு தேவை கழுத்தை நெரித்துவிடலாம்.இப்படிப்பட்ட நிலையில், எல்லாரும் போய் நிற்பது பொதுத் துறை அல்லது தனியார் துறை வங்கிகள் வாசலில் தான். வைப்பு நிதித் திட்டங்கள் தான் நம்பிக்கையான புகலிடம். ஓய்வுபெற்றவர்கள், முதியோர் தம் வாழ்நாள் சேமிப்புகளை வங்கிகளில் போட்டு வைத்து, சிறுக சிறுக வட்டி பெற்று வருவது, நம் நடுத்தரப் பொருளாதார யதார்த்த காட்சிகளில் முக்கியமானது.
கடந்த சில ஆண்டுகளாக வட்டி விகிதங்கள் குறைந்து வந்தன. மொத்தப் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டும், தொழில் வளர்ச்சிக்கு உதவும் விதமாகவும் ரெப்போ விகிதங்கள் குறைவாக வைக்கப்பட்டு இருந்தன.அதனால், வைப்பு நிதித் திட்டங்களுக்கு கிடைத்து வந்த வட்டிகளும் குறைந்தன. வேறு வழியில்லாமல், பலரும் வேறு முதலீட்டு வாய்ப்புகளை நோக்கி நகர்ந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பரஸ்பர சகாய நிதிகளில், ஒவ்வொரு மாதமும் சேமிப்புகள் அதிகரித்து வருவது இதனால் தான். குறைந்தபட்சம், 8 முதல், 10 சதவீத வருவாயையாவது ஈட்ட முடியாதா என்ற ஏக்கத்தில் தான், பலரும் மியூச்சுவல் பண்டுகளை நோக்கி நகர்ந்தனர்.
இன்னும் கொஞ்சம் தைரியசாலிகள், நேரடியாகவே பங்குச் சந்தை முதலீடுகளில் ஈடுபட்டனர். அவர்களில், லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் தப்பித்தனர். மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் நிலையோ, அந்தோ பரிதாபம். பங்குச் சந்தை குறியீட்டெண்கள் மட்டும், ஒரு பக்கம் வரலாறு காணாத முன்னேற்றத்தைக் காண்கின்றன. ஆனால், பணப்புழக்கமும் வளர்ச்சியும் பரவலாக எல்லா பங்குகளிலும் பிரதிபலிக்கவில்லை.தங்கத்தில் முதலீடு செய்தோர் உண்டு. அது, கெட்டியான சேமிப்பு தான். அவசரத் தேவைகளுக்கோ, சுலபமாக செலவுகளைச் சந்திப்பதற்கோ உதவக்கூடியது அல்ல.
தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேமிப்புகளில் சேர்ந்தோர் இருக்கின்றனர். வழக்கமான, 6.75 அல்லது, 7 சதவீதத்தோடு ஒப்பிடும்போது, இது சற்று கூடுதல் தான். ஆனாலும், அங்கேயும் லேசான தயக்கம் இருந்தது. இந்நிலையில், புதிய வகை வங்கிகள், நம்பிக்கையளிக்கும் விதத்தில் வந்துள்ளன. இதற்கு, ‘சிறு நிதி வங்கிகள்’ என்று பெயர். ஒரு காலத்தில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களாகவும், வங்கியல்லாத நிதிச் சேவைகளை வழங்கிய அமைப்புகளாகவும் இருந்தவை, ஸ்மால் பைனான்ஸ் பேங்குகளாக உருவெடுத்துள்ளன.
சிறு நிதி வங்கிகள், 2015 முதல் செயல்பட்டு வருகின்றன. மத்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியோடு துவங்கப்பட்டவை இவை. முதல் கட்டமாக, 10 சிறு நிதி வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டன. அவை, ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பேங்க், கேபிடல் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், திஷா மைக்ரோபின் பிரைவேட் லிமிடெட், சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க். மேலும், உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், உஜ்வன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஈ.எஸ்.ஏ.எப்., ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகியவையே. இவர்கள் அளிக்கும் வட்டி விகிதங்கள், மத்தியமர்களுக்குத் தெம்பு அளிப்பதாக உள்ளன.
ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி, 366 நாள் வைப்பு நிதிக்கே, 8.50 சதவீதம் வட்டி தருகிறது. ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுக்குள்ளான பல்வேறு முதிர்வு காலங்களுக்கு, 9 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. மூத்த குடிமக்களுக்கு, எல்லா முதிர்வு கால வைப்பு நிதிகளிலும் கூடுதலாக அரை சதவீத வட்டி உண்டு. வழக்கமாக ஓராண்டு வைப்பு நிதிக்கு, 6.75 சதவீதம் தான் வட்டி எனும்போது, 8.50 சதவீதம் என்பது நிச்சயம் பெரும் லாபம் தானே! மியூச்சுவல் பண்டுகளில் உள்ள கடன் பத்திரங்கள் சார்ந்த பண்டுகளே, 8 சதவீத அளவுக்குத் தான் வருவாய் ஈட்டித் தருகின்றன.
இந்நிலையில், அடுத்த கேள்விகள் எழுவது சகஜம். ஏன் இவ்வளவு வட்டி கொடுக்கின்றன? நீண்ட காலம் நீடித்து நிற்குமா? இந்த சிறு நிதி வங்கிகள் கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் துவங்கப்பட்டதால், அதற்கு தொழில் மூலதனம் வேண்டும். 100 கோடி ரூபாய் இருந்தால் தான், இத்தகைய வங்கிகளைத் துவங்க முடியும். அதில், 40 சதவீதத்தை, இதன் புரோமோட்டர்கள் கொண்டுவர வேண்டும். பின், தொடர்ச்சியான வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு மூலதனத்தை திரட்டிக் கொள்ளலாம். இன்றைய போட்டி சூழ்நிலையில், மக்களிடம் இருந்து முதலீட்டை திரட்டவே, இவ்வகை வங்கிகள் கூடுதல் வட்டியை வழங்குகின்றன. இவை, பல்வேறு தொழிற்கடன்கள், சிறு கடன்கள், விவசாயக் கடன்கள் ஆகியவற்றை வழங்கும் போது, கூடுதலான வட்டியையே வசூலிக்கின்றன. அதனால், வைப்பு நிதிகளுக்கு இவற்றால் கொஞ்சம் கூடுதலாகவே வட்டி வழங்க முடியும்.
இவ்வங்கிகள், மத்திய ரிசர்வ் வங்கியின் அத்தனை சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டவை. அதன் மூலதனத்தில் குறிப்பிட்ட பகுதியை, மத்திய வங்கியிடம் இருப்பு வைக்க வேண்டும் என்பதில் துவங்கி, முதலீட்டுக்கான பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. பாதுகாப்புடன் முதலீடு, அதேசமயம் கொஞ்சம் கூடுதல் வட்டி என்று எதிர்பார்ப்பவர்களுக்கு, சிறு நிதி வங்கிகள் நல்லதொரு வாய்ப்பு. ஆரம்ப நிலையில் இருப்பதால், இந்த வட்டி வழங்கப்படுகிறது. பந்தன் வங்கி மாதிரி வளர்ந்தபிறகு, வழக்கமான வட்டிகளுக்கே இவையும் திரும்பிவிடக் கூடும். உங்களது மொத்த சேமிப்புகளில், வைப்பு நிதி ஒரு பகுதி மட்டுமே. அத்தனை சேமிப்புகளையும் இதிலேயே போட்டுவிடக் கூடாது. மேலும் மூன்று, நான்கு சிறு நிதி வங்கிகளின் வைப்பு நிதிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது, புத்திசாலித்தனமானது.
-ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|