பதிவு செய்த நாள்
01 செப்2018
05:20

புதுடில்லி : நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது, 15 காலாண்டுகளுக்கு பின், காணப்படும் சிறப்பான வளர்ச்சியாகும். இதற்கு முன், 2014- – 15ம் நிதியாண்டின், ஜூலை – செப்., காலாண்டில் தான், அதிகபட்சமாக, 8.4 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டது.
இது குறித்து, மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8.2 சதவீதமாக உயர்ந்து உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 8.2 சதவீதம் உயர்ந்து, 33.74 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த, 2017 -–18ம் நிதியாண்டின், முதல் காலாண்டில், 31.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வேளாண், தயாரிப்பு உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி நன்கு இருந்ததால், மதிப்பீட்டு காலாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம், சிறப்பான முறையில் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சீனாவை விஞ்சியது இந்தியா :
நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 6.7 சதவீதமாக உள்ளது. இதே காலத்தில் இந்தியா, 8.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது. இதன் மூலம், வேகமான பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனாவை விஞ்சி முன்னேறியுள்ளது.
முக்கிய எட்டு துறைகளும் சாதனை :
கடந்த ஜூலையில், நிலக்கரி, சிமென்ட் உள்ளிட்ட, முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, 6.6 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு, ஜூலையில், 2.9 சதவீதமாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில், நிலக்கரி துறையின் உற்பத்தி, 9.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் துறை, 12.3 சதவீத உயர்வை எட்டியுள்ளது. உரத் துறையின் உற்பத்தி, 1.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிமென்ட் துறையின் உற்பத்தி, 10.8 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகள், உற்பத்தி வளர்ச்சியில் பின்னடைவை கண்டுள்ளன.
கடந்த ஜூலையில், உருக்கு துறை உற்பத்தி வளர்ச்சி, 6 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 9.4 சதவீதமாக இருந்தது. நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டின், ஏப்., – ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, 5.8 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, 2017 – -18ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 2.6 சதவீதமாக இருந்தது.
எட்டு முக்கிய துறைகளில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும். இவை, நாட்டின் தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில், 38 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|