பதிவு செய்த நாள்
10 செப்2018
00:56

கச்சா எண்ணெய்
சில மாதங்களுக்குப் பின், கடந்த வாரம், எண்ணெய் விலையில் அதிகப்படியான ஏற்றத்தாழ்வுகள் நிகழ்ந்தன. ஆரம்ப நாட்களில் உயர்ந்தும், பின்னர் விலை சரிந்தும் காணப்பட்டது.
ஈரான் நாட்டின் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் சூழலில், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சத்தில், விலையேற்றம் காணப்பட்டது.
ஆனால், ‘ஓபெக்’ கூட்டமைப்பு நாடுகளின், ஆகஸ்ட் மாத தினசரி உற்பத்தி, 2 லட்சத்து, 20 ஆயிரம் பேரல்கள் அதிகரித்து, 32.79 மில்லியன் பேரல்களை எட்டியது. இது, இந்த ஆண்டின் அதிகபட்ச உற்பத்தி அளவாகும். மேலும், லிபியாவின் உற்பத்தியும் அதிகரித்தது. இதையடுத்து, விலை, ‘மளமள’வென சரிய ஆரம்பித்தது.
மேலும், அமெரிக்காவின் வர்த்தக மோதல் போக்கால், சீனாவின் தொழில் துறை வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில் குறைந்தது. இதையடுத்து, நாட்டின் இறக்குமதி தேவை குறையும் என்ற கோணத்திலும், எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தது.
அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும் என்ற அறிவிப்பால், அப்பகுதியில் இயங்கி வரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால், உற்பத்தி குறைய வாய்ப்பு இருக்கிறது.மேலும், அமெரிக்க எண்ணெய் இருப்பு, 4.3 மில்லியன் பேரல்கள் குறைந்து, 401.49 மில்லியன் பேரல்களாக குறைந்துள்ளது. இது, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட குறைவாகும். இதனால், சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சி, சிறிதளவு கட்டுப்படுத்தப்பட்டது.
உலகளவில், அரசியல் சார்ந்த முடிவுகளால், எண்ணெய் மற்றும் கமாடிட்டி பொருட்களின் விலை, அதிக ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருகிறது.
தங்கம் வெள்ளி
சர்வதேச சந்தையில் கடந்த வாரம், தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவில் வர்த்தகமாகின.
அமெரிக்காவில் ஒவ்வொரு மாதமும், முதல் வெள்ளிக்கிழமையன்று, அரசில், விவசாயம் சாராத துறைகளில் புதிதாக பணி வழங்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெளியாகும்.
ஆகஸ்ட் மாதத்தில், எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளன. இதன் காரணமாக, பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்ற கண்ணோட்டம் ஏற்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை, இம்மாதம் அல்லது வரும் டிசம்பரில் அதிகரிக்கும் என, கருதப்படுகிறது.
இதையடுத்து, அமெரிக்க நாணய குறியீடு வலுவடைந்ததால், தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவில் வியாபாரம் ஆகி வருகிறது.பொதுவாகவே வட்டி விகிதம் உயரும்போது, தங்கம் மீதான முதலீட்டு ஆர்வம் குறைந்து, அரசு கருவூலங்கள் மற்றும் அது சார்ந்த கடன் பத்திரங்களில் மீது முதலீடு செய்வது வழக்கமாகும்.
இதனால், முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கம் மீதான முதலீட்டைக் குறைத்து, அரசு கருவூலங்களில் முதலீடுகள் செய்து வருகின்றனர்.இருப்பினும், சர்வதேச சந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நம் உள்நாட்டு ஆபரண சந்தையில் விலை சரிவு குறைவாகவே இருந்தது.
இதற்கு முக்கிய காரணம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வரலாற்று சரிவாகும்.
நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கி, 8.6 டன் தங்கத்தை கொள்முதல் செய்துள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன், 2009ம் ஆண்டில், பன்னாட்டு நிதியத்திடமிருந்து, 200 டன் கொள்முதல் செய்தது. தற்போது, மொத்த
தங்கம் இருப்பு, 557.77 டன்.
உலக அளவில், மத்திய வங்கிகளின் மொத்த தங்க இருப்பு பட்டியலில், இந்தியா, 11-ம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா, தொடர்ந்து முதல் இடத்தை வகித்து வருகிறது.ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் சூழலில், தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் எனில், மீண்டும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து, நாட்டின் நாணயம் மேலும் வீழ்ச்சி அடையும்.
செம்பு
கடந்த வாரம் சரிவில் வர்த்தகமான செம்பு, இந்த ஆண்டு துவக்கம் முதல், 8 மாதங்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க அதிபர், வெள்ளியன்று வெளியிட்ட
அறிக்கையில், வர்த்தக மோதல் தொடர்பாக சீனாவுடனான பேச்சில் சுமுக நிலை எட்டப்படவில்லை என்றும், பேச்சு மீண்டும் தொடரும் என்றும் அறிவித்தார்.
தற்போது, அமெரிக்கா கூடுதலாக, 200 பில்லியன் மதிப்பிலான சீன இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்க தயாராகி வருகிறது.உலக அளவில், செம்பு நுகர்வில், சீனா முதலிடம் வகிக்கிறது. சீனாவின் தேவை மற்றும் இறக்குமதியை பொறுத்து, செம்பு விலையில் மாற்றங்கள் ஏற்படும்.
சில மாதங்களாக, சீனாவின் நுகர்வு தேவை குறைந்ததன் காரணமாக, விலை கடுமையாக சரிந்துள்ளது. வரும் நாட்களில் இத்தகைய போக்கு கட்டுக்குள் கொண்டு வரப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|