பதிவு செய்த நாள்
17 செப்2018
23:25

மும்பை: குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில், பொது துறையை விட, தனியார் துறை வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் சந்தைப் பங்கு, அதிகரித்து வருவது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இது குறித்து, ‘டிரான்ஸ்யூனியன் சிபில் மற்றும் சிட்பி’ வெளியிட்ட ஆய்வறிக்கை: இந்தாண்டு, ஜூன் நிலவரப்படி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கிய கடனில், பொதுத் துறையைச் சேர்ந்த, 21 வங்கிகளின் பங்கு, 50.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2017, ஜூனில், 55.8 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இதே காலத்தில், குறு, சிறு, நிறுவனங்கள் பிரிவின் ஒட்டுமொத்த கடன் வளர்ச்சி, 16.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வாராக் கடன் :
பொதுத் துறை வங்கிகளின், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவின் கடன் வளர்ச்சி, 5.5 சதவீதமாக உள்ளது. இது, தனியார் நிதித் துறையில், 23.4 சதவீதமாக உயர்ந்துஇருக்கிறது. இதே காலத்தில், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் கடன் பிரிவில், தனியார் துறை வங்கிகளின் சந்தைப் பங்கு, 28.1 சதவீதத்தில் இருந்து, 29.9 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
வங்கி சாரா நிதி நிறுவனங்களின், சந்தைப் பங்களிப்பு, 9.6 சதவீதத்தில் இருந்து, 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகள், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கிய கடனில், வாராக் கடன் அளவு, 15.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, 2017, ஜூன் மாதத்தில், 14.5 சதவீதமாக இருந்தது.
அதேநேரத்தில், இதே காலத்தில், தனியார் துறை வங்கிகள், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய வாராக் கடன், 4 சதவீதத்தில் இருந்து, 3.9 சதவீதமாக குறைந்துள்ளது.
பரிசீலனை காலம் :
பொதுத் துறை வங்கிகள், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களின் கடன் விண்ணப்பங்களின் பரிசீலனை காலத்தை, 41 நாட்களில் இருந்து, 31 நாட்களாக குறைத்துள்ளன. அதேநேரத்தில், தனியார் வங்கிகள், இந்த பரிசீலனைக் காலத்தை, 24 நாட்களில் இருந்து, 18 நாட்களாக குறைத்துள்ளன. எனினும், குறுங்கடன்களுக்கான பரிசீலனை காலம் தான் அதிகம் குறைந்துள்ளதே தவிர, பெருங் கடன்கள் பிரிவில் பெரிய முன்னேற்றம் இல்லை.
அமைப்பு சார்ந்த கடன் துறையில், கடந்த, ஜூன் நிலவரப்படி, ஒட்டுமொத்த கடன் நிலுவை, 101 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்கு, 22.80 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. பெரிய மற்றும் நடுத்தரமான கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் நிலுவை, 42.80 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் காணப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த அளவில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கடன் வளர்ச்சி நன்கு உள்ளது. இது, மின்னணு தொழில்நுட்பம் வேகமாக பரவி வருவதன் தாக்கம் எனலாம். இந்த வளர்ச்சி, கடன் வழங்குவதில், நிதிச் சந்தை வலுப்பெற்று வருவதையும் குறிக்கிறது.
–முகமது முஸ்தபா, தலைவைர், சிட்பி
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|