பதிவு செய்த நாள்
18 செப்2018
23:55

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, மூன்று வங்கிகளை இணைக்கும் திட்டத்தை, தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ்’ வரவேற்றுள்ளது.
பேங்க் ஆப் பரோடா, விஜயா பேங்க், தேனா பேங்க் ஆகியவற்றை ஒன்றிணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின், நிதி நிறுவன குழுமப் பிரிவின் துணை தலைவர், அல்கா அன்பரசு கூறியதாவது:
மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு திட்டம் வரவேற்கத்தக்கது. இதனால், வங்கித் துறையின் நிர்வாக தரம் உயரும். தேனா வங்கியை விட, பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி ஆகியவற்றின், சொத்து, பங்கு மூலதனம் மற்றும் லாப விகிதம் அதிகம். ஒருங்கிணைந்த வங்கிக்கு, மத்திய அரசின் பங்கு மூலதன உதவி தேவைப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராஜேஷ் ஷா கூறியதாவது: வங்கித் துறையை வலுப்படுத்த, மத்திய அரசு முற்போக்கு சிந்தனையுடன் முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு, வங்கித் துறை வலுவாக இருப்பது முக்கியம். இவ்வாறு, அவர் கூறினார்.
ஷேர்கான், கிரான் தார்ட்டன் உட்பட, பல நிறுவனங்கள், இணைப்பு நடவடிக்கையை வரவேற்று உள்ளன.
ஓராண்டு ஆகும் :
விஜயா பேங்க், தேனா பேங்க் ஆகியவற்றின் இணைப்பால், நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக, பேங்க் ஆப் பரோடா உருவெடுக்கும். இணைப்பு நடவடிக்கை முடிய ஓராண்டு ஆகும்.
எதிர்ப்பு :
‘வங்கிகளை இணைப்பதால், வாராக் கடன்களை வசூலித்து விட முடியாது. ஆகவே, இணைப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என, இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|