பதிவு செய்த நாள்
18 செப்2018
23:56

மும்பை : ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன தலைவர், அனில் அம்பானி, தொலைத்தொடர்பு துறை வர்த்தகத்தில் இருந்து, முழுமையாக வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று, அனில் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ஆறு நிறுவனங்களின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற, ஏராளமான பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில், அனில் அம்பானி பேசியதாவது: கடந்த, 2002ல், மொபைல்போன் சேவையை, குறைந்த கட்டணத்தில் வழங்கத் துவங்கிய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு, தற்போது, 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் உள்ளது. இக்கடன் முழுவதையும் திரும்பத் தர, உறுதி பூண்டுள்ளோம்.
தீர்வு :
இதையொட்டி, தொலைத்தொடர்பு சேவையில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். அடுத்த சில மாதங்களில், கடனுக்கு தீர்வு காணப்படும். ஆர்ஜியோ நிறுவனத்திற்கு, தொலைத்தொடர்பு கட்டமைப்பு வசதிகள் மற்றும் 'ஆப்டிகல் பைபர்' இணைப்புகளை விற்பனை செய்யும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நிறுவனத்தின், தரவு மையங்கள், கடலடி கேபிள்கள், சர்வதேச அழைப்பு வசதிகள் ஆகிய வற்றால், 35 ஆயிரம் நிறுவனங்களுக்கு சேவை அளிக்க முடியும். அவற்றின் மூலம், 50 சதவீத வருவாயை, வெளிநாடுகளில் இருந்து பெற முடியும்.
வங்கிக் கடனை திரும்ப அளிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த வர்த்த கத்தில் இருந்து வெளியேறுகிறோம். அகண்ட அலைவரிசை பங்கீடு, வர்த்தகம் ஆகியவை தொடர்பாக, தொலைத் தொடர்பு துறையின் அனுமதியை எதிர்நோக்கியுள்ளோம்.
ரியல் எஸ்டேட் :
இனி, முழு கவனத்தையும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் செலுத்த உள்ளோம். ரிலையன்ஸ் ரியாலிட்டி நிறுவனம், நவி மும்பையில், 133 ஏக்கரில் 'திருபாய் அம்பானி அறிவுசார் நகரம்', என்ற, பிரமாண்டமான தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிதொழில்நுட்ப பூங்காவை உருவாக்கி வருகிறது. இங்கு, ஏற்கனவே, 30 லட்சம் சதுர அடி பரப்பில் அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது. அவை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படும். இந்தாண்டில் இருந்து வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். இப் பூங்கா, மிகப் பெரிய வர்த்தக வாய்ப்புகளையும், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் உருவாக்கும்.
போட்டி :
தற்போது, தொலைதொடர்பு சேவை துறை, ஆக்கச் சிதைவு காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இத்துறை, தற்போது, விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் வசமாகி வருகிறது; இது, விரைவில் இரு நிறுவனங்களாக குறைந்து, எதிர்காலத்தில், ஒரே நிறுவனத்தின் கீழ் வரவும் வாய்ப்பு உள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், கடன்களை குறைக்க, நிதிச் சேவைகளில் மட்டும் கவனம் செலுத்தி, அடுத்த, 12 – -18 மாதங்களில் நிதிசாரா சேவைகளில் இருந்து வெளியேற திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
முதுகில் குத்த மாட்டோம் :
பங்குதாரர்கள் கூட்டத்தில், ‘ரபேல்’ ஒப்பந்தம் பற்றி, ஒருவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அவரை, ரிலையன்ஸ் அதிகாரி ஒருவர், முதுகில் கைவைத்து ஆசுவாசப்படுத்தினார். அவரை தொடர்ந்து பேச ஊக்குவித்த அனில் அம்பானி, “ நண்பர், போதிய விபரங்களின்றி, உண்மைக்கு மாறான செய்திகளை கூறுகிறார். நிறுவனம், எப்போதும் பங்குதாரர் முதுகை தட்டிக்கொடுக்குமே தவிர, முதுகில் குத்தாது” என, நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
ரிலையன்ஸ் குழுமம், தொலைத் தொடர்பு துறையில் கால் பதிக்க காரணமாக இருந்தவர், என் சகோதரர் முகேஷ் அம்பானி. இன்று, என் தலைமையில் உள்ள, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு, ஆதரவு தந்து, எனக்கு தனிப்பட்ட வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறார், சகோதரர் முகேஷ் அம்பானி. அவருக்கு நன்றி தெரிவிக்க, இதுவே சரியான தருணம் என, கருதுகிறேன்
-அனில் அம்பானி,தலைவர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|