பதிவு செய்த நாள்
28 செப்2018
00:53

புதுடில்லி : இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பு, 2030ல், 70 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சந்தை ஆய்வு நிறுவனமான, கே.பி.எம்.ஜி., நாரட்கோ மற்றும் அப்ரியா நிறுவனங்களுடன் இணைந்து வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கை: கட்டுமான திட்டங்களின் தாமதம், விற்பனையாகாத குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற இடர்ப்பாடுகளுக்கு இடையே, மத்திய அரசின் சீர்திருத்த திட்டங்களால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி கண்டு வருகிறது.
குறிப்பாக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட், ‘அனைவருக்கும் வீடு’ திட்டம் போன்றவை, வீடு வாங்குவோர் மட்டுமின்றி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் சம்பாதித்து உள்ளது. மேலும், பரவலாகி வரும், அலுவலக பகிர்வு முறை, வணிக கட்டுமானப் பிரிவின் தேக்கத்தை குறைத்து வருகிறது. இது, ரியல் எஸ்டேட் துறையின், வலுவான எதிர்கால வளர்ச்சிக்கு வழி கோலியுள்ளது.
முன்னேற்றம் :
சர்வதேச ரியல் எஸ்டேட் தர வரிசைப் பட்டியலில், 2014 முதல், இந்தியா நிலையான முன்னேற்றம் கண்டு வருகிறது. இது, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்துள்ளது. இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில், அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இந்தாண்டு, ஜன., – மார்ச் வரை, ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடு, 15 சதவீதம் உயர்ந்து, 300 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, பெரிய மற்றும் சிறிய நகரங்கள் வளர்ச்சியால், 2026ல், 10 ஆயிரம் கோடி டாலரை தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தாண்டு, இதுவரை, நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு, 400 கோடி டாலரை தாண்டி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சராசரி ஒப்பந்த மதிப்பு, 15.70 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, 2016ல், 4.70 கோடி டாலராக இருந்தது.
அமெரிக்கா :
இந்திய ரியல் எஸ்டேட் துறையில், இந்தாண்டு குவிந்த முதலீடுகளில், அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு, 44 சதவீதமாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். அன்னிய முதலீடுகளில், 90 சதவீதத்திற்கும் அதிகமானோர், மும்பை, புனே, பெங்களுரு, ஐதராபாத் நகரங்களில், வர்த்தகப் பிரிவில் முதலீடு செய்துள்ளனர்.
இத்துறையில், வெளிநாடு மற்றும் உள்நாட்டினரின் சராசரி முதலீடு, முறையே, 14.90 கோடி டாலர் மற்றும் 8.70 கோடி டாலராக உள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்கள், வர்த்தகம் மற்றும் குடியிருப்பு திட்டங்களில், முறையே, 95.90 கோடி டாலர் மற்றும் 87 கோடி டாலர் முதலீடு செய்துள்ளனர். ரியல் எஸ்டேட் துறையின் இந்த எழுச்சி, வரும் ஆண்டுகளிலும் தொடரும். இத்துறையின் சந்தை மதிப்பு, 2025ல் 65 ஆயிரம் கோடி டாலர்; 2028ல், 85 ஆயிரம் கோடி டாலராக உயரும். இதையடுத்து, 2030ல், 1 லட்சம் கோடி டாலர், அதாவது, 70 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூன்று நகரங்கள் முன்னிலை :
ரியல் எஸ்டேட் துறையில், இந்தாண்டு குவிந்த முதலீடுகளில், மும்பை, 53 சதவீத பங்களிப்புடன், 200 கோடி டாலரை ஈர்த்து, முதலிடத்தை பிடித்துள்ளது. ஐதராபாத், 79.30 கோடி டாலர்; பெங்களுரு, 69.40 கோடி டாலருடன், அடுத்த இடங்களை பிடித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|