பதிவு செய்த நாள்
08 அக்2018
00:13

சந்தை சந்தித்த சமீபத்திய வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். இதை, முதலீட்டு அமைப்பு சார்ந்த நிகழ்வாகவே பார்க்க வேண்டும்.ஒரு துறையில், சந்தையின் அபரிமிதமான முதலீட்டு வரவுகள் குவியும் போது, இரண்டு விளைவுகள் உறுதி.
ஒன்று, அந்த துறை பங்குகளின் மதிப்பு வரலாறு காணாத அளவு உயர்ந்து, சந்தையையே வழி நடத்திச் செல்லும். அடுத்து, அந்த துறைக்கு ஏற்படும் எந்த இடையூறும், ஒட்டு மொத்த சந்தையையும் சரியச் செய்யும்.ஒரு துறையின் அபரிமித தாக்கம், சந்தையின் ஒட்டுமொத்த நகர்வுகளையும் வழி நடத்தும் போது, அதுவே சந்தையின் நிலைத்த தன்மைக்கு பங்கமாகிவிடும்.இது தான் தற்போது இந்திய சந்தையில் நடந்துள்ளது.
ஒரு சில துறைகளும், முதலீட்டு திட்டங்களும் சந்தையை நடத்திச் செல்லும் வல்லமை பெற்று, பின், அந்த வல்லமையே, சந்தை வீழ்ச்சிக்கும் வித்திடச் செய்துவிட்டது. சந்தையின் தற்போதைய சரிவிற்கான எளிய விளக்கம் இது தான்.சந்தை வரலாறு இத்தகைய நிகழ்வுகளை தொடர்ந்து சந்தித்தாலும், முதலீட்டாளர்களின் மறதித் தன்மை, அதே தவறுகளை, அடுத்த சந்தை சுழற்சியில் செய்ய வழி வகுக்கிறது.ஒவ்வொரு சுழற்சியிலும் புதிய முதலீட்டாளர்கள் சந்தைக்குள் நுழைந்து, அதே தவறுகளை மீண்டும் செய்து, பாடம் கற்பது சந்தை மரபு. நம் சந்தை, இந்த தவறான மரபை தவறாமல் தொடர்ந்து காப்பாற்றி வருகிறது.
இம்முறை, மிட்கேப், சிறு மற்றும் குறு நிறுவன பங்குகளிலும், நிதி நிறுவன பங்குகளிலும் சந்தை தன்னிலை இழந்து, பணத்தையும் இழக்க வழி செய்திருக்கிறது.பங்குச் சந்தையின் அடிப்படை வெற்றி ரகசியம், சாதகமான மதிப்பீட்டில் பங்குகளை வாங்குவது. அதை செய்யத் தவறினால், விளைவுகள் நிச்சயம் பாதகம் தான். அந்த விளைவுகள் நம் தவறுகளின் அளவீட்டையும், தாக்கத்தையும் பொறுத்தது.
மதிப்பீட்டு பிழைகளை அறியாமலே, பலரும் சந்தையில் அதிக பணத்தை புழங்க விடும் போது, அந்த பணம் தவறான இடங்களில் முதலீடு செய்யப்படக் கூடும். அதை, சந்தையின் பெரும்பான்மை மக்கள் இந்த ஆண்டு செய்து இருக்கின்றனர்.இதற்கு விளைவுகள் நிச்சயம் உண்டு. அதைத் தான் நாம் சமீப நாட்களாக பார்த்து வருகிறோம். அந்த விளைவுகள் சொல்லித் தரும் பாடங்களை உடனடியாக கற்று மீள்பவர்கள், ஓரளவு தம்மை காப்பாற்றிக் கொள்வர்.
காலம் தன்னுடைய மதிப்பீட்டு பிழைகளை சரி செய்யும் என்று சிந்திப்பவர்கள், காலத்தையும் பணத்தையும் இழக்கக்கூடும்.கடந்த சந்தையில், தவறான முதலீடு நடந்த துறையான உட்கட்டமைப்பு துறைக்கு நடந்ததே, இந்த முறை நிதி நிறுவனங்களுக்கு நடக்கும்.மிட்கேப், சிறு மற்றும் குறு நிறுவனங்களில், அடுத்த ஓராண்டிற்குள் இழந்த முதலீடுகளை திரும்ப அடைவது மிக கடினம். இதற்கு அதிக கால அவகாசம் தேவை. அதை முதலீட்டாளர்கள் கொடுப்பரா அல்லது பொறுமை இழந்து விடுவரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சந்தையில் முதலீட்டாளர்களின் நடத்தை, எத்தகைய வாழ்க்கை மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை கற்கும் நிலைக்கு சந்தையே தன்னை தள்ளிக் கொண்டு விட்டது.இது துரதிர்ஷ்ட வசமானது என்றாலும்,ஆரோக்கியமான சந்தை வளர்ச்சிக்கு வழி செய்யும் என்று நம்புவோம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|