பதிவு செய்த நாள்
10 அக்2018
23:23

நியூயார்க்:‘‘நான் அரசியலில் நுழைந்தால், மூன்றாம் உலகப் போர் மூளும்,’’ என, ‘பெப்சிகோ’ நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய, இந்திரா நுாயி தெரிவித்துள்ளார்.
இந்திரா நுாயி, பெப்ஸி வர்த்தகத்தில் புரிந்த சாதனைகள், சர்வதேச பெண்கள், சிறுமியருக்கு ஆதரவான செயல்பாடுகள், மனிதநேய பண்புகள் ஆகியவற்றை பாராட்டி, ஏஷியா சொசைட்டி என்ற அமைப்பு, 'சிறந்த மாற்றத்திற்கான விருது' வழங்கி கவுரவித்துள்ளது.இதற்கான விழா, நியூயார்க்கில் நடைபெற்றது. அதில், பார்வையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு, இந்திரா நுாயி அளித்த பதில்:
அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் அமைச்சரவையில் சேருவீர்களா என்ற கேள்விக்கு, 'முடியாது' என்று தான் சொல்வேன்.ஏனென்றால், நான் ஒளிவுமறைவின்றி பேசுபவள். அதனால், எனக்கு அரசியல் ஒத்து வராது. அரசியல் ராஜதந்திரம் எனக்கு தெரியாது. அப்படியே நான் அரசியலில் குதித்தாலும், என் வெளிப்படையான பேச்சால், மூன்றாம் உலகப் போர் தான் மூளும்.
கடந்த, 40 ஆண்டுகளாக, காலையில், 4:00 மணிக்கு விழித்து, வீட்டு வேலைகளை முடித்து, பரபரப்புடன் அலுவலகத்திற்கு விரைந்து, தினமும், 18 – -20 மணி நேரம் பணியாற்றி பழகி விட்டேன்.இன்னும், என் மனதில் பெப்ஸிகோ தான் நிற்கிறது. அதில் இருந்து வெளியே வர முயற்சிக்கிறேன். பெப்ஸியை தாண்டி, வெளியிலும் ஓர் உலகம் உள்ளதை உணர்கிறேன்.
அடுத்து எழுதுவது, பல்வேறு நாடுகளுக்கு செல்வது, வீடு மற்றும் அலுவலக வேலைகளுக்கு எப்படி நேரத்தை சரிசமமாக ஒதுக்குவது என்பது குறித்து, சொற்பொழிவாற்றுவது என, பல திட்டங்கள் கைவசம் உள்ளன.இவ்வளவு நாள் ஓய்வின்றி உழைத்து பழகி விட்டதால், தற்போது நீண்ட நேரம் துாங்க முடிவதில்லை. அதனால், துாங்குவதற்கு கற்றுத் தரும் பள்ளிக்குச் சென்று, 6- – 8 மணி நேரம் துாங்க கற்றுக் கொள்ளுமாறு, என் நலம் விரும்பிகள் ஆலோசனை கூறுகின்றனர்.
நான் மேற்கத்திய நாடுகளில் பணிபுரிந்தாலும், ஆசியாவின் பாரம்பரிய குடும்ப உறவின் மகத்துவத்தையும், வாழ்க்கை பாணியையும் என் வாழ்க்கையில் பின்பற்றி வந்துள்ளேன். என் மகள்களுக்கும் அதை கற்றுத் தந்துள்ளேன்.ஆசியாவைப் போல, அமெரிக்காவில் கூட்டுக் குடும்ப முறை பரவலாக வேண்டும். வீட்டுப் பெரியோரின் அக்கறை மற்றும் வழிகாட்டுதல், இளைய தலைமுறையினருக்கு அவசியம் தேவை.
அமெரிக்காவில், கூட்டுக் குடும்ப முறை இல்லாததால், வேலைக்கு செல்லும் தம்பதியர், தங்கள் குழந்தைகளை, 'கிரீச்' எனப்படும் மழலையர் காப்பகங்களில் விட்டுச் செல்கின்றனர்.நானும் என் கணவரும் அதுபோல செய்யவில்லை. இந்தியாவில் இருந்து, என் பெற்றோர், மாமனார், மாமியார் ஆகியோரை வரவழைத்து, குழந்தைகளை பார்த்துக் கொண்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
நீ பெரிய நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்தாலும், அந்த எண்ணத்தை, வெளியில் உள்ள காரிலேயே விட்டு விட்டு, வீட்டுக்குள், சராசரி மனைவியாக, குழந்தைகளுக்கு அன்புத் தாயாக நடந்து கொள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என, என் தாய் அறிவுரை கூறுவார். அதை அப்படியே நான் பின்பற்றி வருகிறேன்.
இந்திரா நுாயி
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|