பதிவு செய்த நாள்
28 அக்2018
02:16

மும்பை,: ‘‘ரிசர்வ் வங்கியை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காத எந்த அரசும், உடனடியாகவோ, சில காலம் கழித்தோ, நிதிச் சந்தையின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும்,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரால் ஆச்சார்யா எச்சரித்துள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே, சில பிரச்னைகளில் உரசல் போக்கு காணப்படுகிறது.வங்கிகளின் வாராக் கடனை குறைக்க, கடுமையான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. மேலும், அதிக வாராக் கடன் உள்ள சில வங்கிகள், தீவிர கண்காணிப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.இதனால், இவ்வங்கிகளால் பிற வங்கிகளைப் போல, தாராளமாக கடன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, தொழில் துறை வளர்ச்சியை பாதிக்கும் என, மத்திய அரசு அஞ்சுகிறது.விரைவில், பொதுத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், விதிமுறைகளை தளர்த்த, மத்திய அரசு விரும்புகிறது.அதை, ரிசர்வ் வங்கி கண்டுகொள்ளாமல் உள்ளது.இது ஒருபுறம் இருக்க, பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் அதிகாரத்தை, ரிசர்வ் வங்கியிடம் இருந்து பிரித்து, தனி அமைப்பின் கீழ் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதனால், வேகமாக வளர்ந்து வரும் மின்னணு பணப் பரிவர்த்தனைகளை சுலபமாக கண்காணிக்க முடியும்.இந்த அமைப்பின் தலைவரை, ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, மத்திய அரசு நியமிக்கலாம் என, உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.இதற்கு, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் தன் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னர் தான், புதிய அமைப்பின் தலைவராகவும் இருக்க வேண்டும் என, அவர் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கிக்கு, பொதுத் துறை வங்கிகளை கட்டுப்படுத்த, போதிய அதிகாரம் இல்லை என்றும் அவர் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், மும்பையில், கருத்தரங்கு ஒன்றில், ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரால் ஆச்சார்யா பேசியதாவது: ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மதிக்காத எந்த அரசும், உடனடியாகவோ அல்லது சிறிது காலம் கழித்தோ, நிதிச் சந்தைகளின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும். அது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீக்கிரையாக்கும். அந்த நேரத்தில், மிக முக்கியமான ஒழுங்குமுறை அமைப்பை குறைத்து மதிப்பிட்டு விட்டதற்கு, அரசு வருத்தப்படும்.ரிசர்வ் வங்கியின் அதிகாரம், பொறுப்புடைமை ஆகியவை குறைந்து, ஸ்திரமற்ற சூழல் நீடிக்குமேயானால், அது, நிதிச் சந்தையில், கடன் பத்திர வருவாய், அன்னியச் செலாவணி மதிப்பு ஆகியவற்றில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும்.அறிவார்ந்த நாடுகள், மத்திய வங்கிகளுக்கு தேவையான சுதந்திரத்தை வழங்கும். அதன் மூலம், கடன் செலவைக் குறைத்து, சர்வதேச முதலீடுகளை நீண்ட காலத்திற்கு ஈர்க்கும்.அரசு கொள்கைகள், நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என, ரிசர்வ் வங்கி கருதினால், அதை திடமுடன் எடுத்துக் கூற வேண்டும். ரிசர்வ் வங்கி, ஒரு நல்ல நண்பன் போல, மத்திய அரசுக்கு பிடிக்காத கசப்பான உண்மைகளையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதை விட்டு, ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பது ஆபத்தில் தான் முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
டெஸ்ட் – ஒரு நாள் போட்டி : மத்திய வங்கிகளை, கிரிக்கெட்டில், ‘டெஸ்ட்’ போட்டியில் பங்கேற்கும் அணிகளாக கருதலாம். அவை, வெற்றிக்காக, நின்று விளையாடும்.ஆனால், மத்திய அரசு துறை அதிகாரிகள், 20 ஓவர் ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் அணிகளை போல, உடனே பலன்களை எதிர்பார்த்து செயல்படுவர்.
விரல் ஆச்சார்யா, துணை கவர்னர், ரிசர்வ் வங்கி
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|