பதிவு செய்த நாள்
29 அக்2018
07:11

அமெரிக்க பங்குச் சந்தையின் சமீப நகர்வுகள், உலக பங்குச் சந்தைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து சரியும் டெக்னாலஜி பங்குகள், பல சராசரி அமெரிக்கர்களின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது.
இதற்கு காரணம், பெருவாரியான அமெரிக்கர்களின் ஓய்வூதிய நிதி திட்டமான 401(கே), பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், வட்டி விகிதம் மிக குறைவாக இருந்த நிலையில், பங்கு முதலீடுகளை மட்டுமே பலரும் தேர்தெடுத்தனர். இதன் நீட்சியாக, ஓய்வூதிய பணம் அமெரிக்க பங்கு சந்தையை முன் நடத்திய சூழல் உருவானது.
ஈ.டி.எப். முறையிலும் குறிப்பிட்ட சில பங்குகளில் பெரும் பண முதலீடுகள், கடந்த 10 ஆண்டுகளில் செய்யப்பட்டன. அமெரிக்க சந்தை தொடர்ந்து உயர இந்த முதலீடுகளே முக்கிய காரணம். இந்த முதலீடுகள் ஒருவழி பணவரத்தை சந்தையில் ஏற்படுத்தியது.சந்தையின் பங்கு மதிப்பீடுகள் நெடுங்கால சராசரிகளை எல்லாம் கடந்து, சரித்திர உச்சத்தை சில குறிப்பிட்ட பங்குகளில் எட்டியது. இந்த பங்குகளின் மீது முதலீட்டாளர்களின் கவனம் முழுவதும் இருக்க, அவை மேலும் மதிப்பில் உயர்ந்தன.
ஆனால், சந்தை அக்டோபரில் சந்தித்த திடீர் வீழ்ச்சி, மாற்றத்திற்கு வழி திறந்து இருக்கிறது. வீழவே வாய்ப்பில்லை என்று சந்தையில் அனைவராலும் கருதப்பட்ட பங்குகளும் சரிந்தது, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சாமானியர்கள் அனைவரும் தினமும் அச்சத்தோடு சந்தையின் நகர்வுகளை கவனிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
‘வீழ்ச்சி காணா பங்குகள்’ என்று கருதப்பட்ட, எப்.ஏ.ஏ.என்.ஜி., எனும், பேஸ்புக், ஆப்பிள், அமேசான், நெட்பிளிக்ஸ் மற்றும் கூகுள் ஆகிய ஐந்து நிறுவனப் பங்குகளின் விலை பெரும் உயர்விற்கு பின் திடீர் சரிவை சந்திக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.இவற்றின் தொடர் சரிவு, ஈ.டி.எப்., களில் இருந்தும், 4019(கே)வில் இருந்தும் பெரும் பண வெளியேற்றத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் பெருக துவங்கியுள்ளது.
இதனால், சந்தையில் முதலீட்டாளர்கள் எப்.ஏ.ஏ.என்.ஜி., பங்குகளை மேலும் விற்க வாய்ப்புள்ளது. இதன் அதிர்வலைகள் தான் கடந்த சில வாரங்களாக நம் சந்தையிலும் தெரிகின்றன.நம் நாட்டில் அதிக மதிப்பீட்டில் வர்த்தகம் செய்யப்பட்ட நிதி நிறுவன பங்குகளும், சிறு நிதி வங்கி பங்குகளும் பெரும் விலைச் சரிவை கண்டுள்ளன.நம் நாட்டிலும் முதலீட்டாளர்கள், மேலும் நஷ்டம் ஏற்படுவதற்கு முன்பாக விற்றுவிட்டு வெளியேறி விடலாமா என்று யோசிக்க துவங்கி உள்ளனர்.
கடந்த சில வாரங்களாக, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், குறைந்த பண வரத்தை காண்கின்றன. வரும் வாரங்களில், நிலைமை மாறி பணம் மேலும் வெளியேறுமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்றாலும், நம் உள்நாட்டு நிதி நிறுவனங்கள் வாங்குவதால் சந்தை குறியீடுகள் அதிகம் விழவில்லை.வரும் வாரங்களில், குறியீடுகள் நிச்சயம் சோதிக்கப்படும்.
அந்த சூழலில், சந்தையின் மனநிலை மாற்றங்கள் எப்படி அமைகின்றன என்பதை பொறுத்து, வருங்காலத்தை பற்றிய முதலீட்டு பார்வைகளும் மாறும்.தேர்தல் ஆண்டை நோக்கி போகும் நாம் முதலீட்டு பார்வையை, தொலைநோக்கோடு செதுக்கிக்கொண்டால், நாம் எடுக்கும் முடிவுகள் நிச்சயம் வெற்றி அடையும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|