பதிவு செய்த நாள்
29 அக்2018
07:13

பங்குச் சந்தையில் ஆறு மாதங்களில் இல்லாத வீழ்ச்சி; அன்னிய முதலீட்டாளர்கள், 1 லட்சம் கோடி ரூபாய் வரை தங்கள் முதலீட்டை திரும்ப எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; ரூபாய் மதிப்பு சரிவு. இவையெல்லாம் ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொல்கின்றன: இந்திய பொருளாதாரம், ஓஹோ என்று இல்லை. இதில், சாதாரணர்களான நாம் என்ன செய்யலாம்?
‘நெருப்பு என்றால் வாய் வெந்துவிடாது’ என்ற சொலவடை உண்டு. ஆனால், பொருளாதாரத்தில் புகை என்று சொன்னாலே, நாக்கு வெந்துவிடும். ஆமாம், கடந்த இரண்டு மாதங்களுக்குள் நிலைமை படபடவென மாறிக்கொண்டு இருக்கிறது.பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் ஒருபக்கம் நஷ்டத்தைச் சந்தித்து இருக்கிறனர். ‘மிட்கேப், ஸ்மால் கேப்’ பங்குகளை வாங்கியவர்கள் நிலைமை ரொம்ப மோசம். ப்ளூசிப்ஸ் என்று சொல்லப்படும் லார்ஜ்கேப் பங்குகளை வாங்கியவர்களும் பெரும் லாபம் ஈட்ட முடியவில்லை.
பங்கு விலைகள் கடுமையாக உயர்ந்தபோது, வாங்கியவர்கள், தற்சமயம், 15 சதவீத அளவுக்கேனும் நஷ்டத்தைச் சந்தித்து உள்ளனர்.பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தவர்கள் நிலையும் இதேதான். குறைந்தபட்சம், 10 சதவீத வீழ்ச்சியையேனும் சந்தித்துள்ளனர்.
இந்த ஆண்டில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 13 சதவீதம் சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றமும் சேர்ந்துகொள்ள, படிப்படியாக நமது பணவீக்கத்தின் அளவும் உயர்ந்து வருகிறது.இந்த நிலைமைகளைச் சமாளிக்க, மத்திய அரசாங்கம், ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் கடன் பத்திரங்களை வெளியிடுகிறேன்’ என்று, சொல்லி இருக்கிறது.அதேபோல், வாராக்கடன் பிரச்னையில் சிக்கியிருக்கும் பொதுத் துறை வங்கிகளை மீட்டெடுக்கவும் ‘பெருமளவு நிதி மூலதனம் வழங்கப்படும்’ என்றும் சொல்லி இருக்கிறது.
இவையெல்லாம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்ற நிலையில், தொடர்ச்சியாக அதிர்ச்சி செய்திகள் தான் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.குறிப்பாக, ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., சரிவைச் சந்தித்தது என்பது உள்கட்டுமானம், வங்கிசாரா நிதி நிறுவனம் போன்ற அமைப்புகளில் பெரும் அவநம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது.இந்தச் சூழ்நிலைகள் மாறுவதற்கும், பொருளாதாரம் தலைநிமிர்வதற்கும் கொஞ்சம் காலம் பிடிக்கலாம். இது ஒருவிதமான மந்தநிலை.
இந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் சர்வதேச நிதியமான, ஐ.எம்.எப்., சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. 2018ல் உலகப் பொருளாதாரம் 3.7 சதவீத அளவுக்கு வளரும். ஆனால், 2019, 2020களில் வளர்ச்சி சரியும் என்று தெரிவித்துள்ளது. 2008ல் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கம் போன்ற நிலை ஏற்படவும் செய்யலாம் என்ற எச்சரிக்கையையும் நிதியம் வழங்கியுள்ளது.இவையெல்லாம் ஒரேஒரு செய்தியைத்தான் நம்மைப் போன்ற மத்திமர்களுக்குச் சொல்கின்றன; பாதுகாப்பாக இருங்கள்.
எது பாதுகாப்பு?
வேலை: இப்போதிருக்கும் வேலையை மாற்றுகிறேன், வேறு வேலை தேடுகிறேன் என்று ஆரம்பிக்காதீர்கள். ஒருசில, 1,000 ரூபாய் சம்பள உயர்வுக்காக, வேலைகளை மாற்றிக்கொள்ளாதீர்கள். பொருளாதாரத்தில் மந்த நிலை தொடரும்போது, பெரிய வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இருக்கும் வேலைக்குள்ளும், அத்தியாவசியமான துறைகளுக்குள்ளும் உங்களைப் பொருத்திக்கொள்ளுங்கள். பல புதிய திட்டங்கள், முயற்சிகள் ஆசை ஆசையாகத் துவங்கப்பட்டிருக்கலாம். அவற்றுக்குப் போதிய மூலதனம் கிடைக்காமல் போகலாம், வளர்ச்சி வாய்ப்பு சட்டென அருகிப் போய்விடலாம்.
அதனால், அத்தகைய புதிய திட்டங்கள், பிரிவுகள் மூடுவிழா காணலாம்.உங்களை ஒரு தவிர்க்கமுடியாத நபராக மாற்றிக்கொள்வது, இதுபோன்ற சூழ்நிலையில் அவசியம்.கடன்கள்: வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என்றெல்லாம், எந்தப் புதிய கடனையும் இந்தச் சமயத்தில் வாங்க வேண்டாம். இருக்கக்கூடிய கடன்களில் முடிந்தவரை முன்பணம் செலுத்தி, உங்கள் மாதாந்திர சுமையைக் குறைத்துக்கொள்ள முடியுமா என்று பாருங்கள்.
வரவுகள் பெருகாத நிலையில், கடனுக்கான வட்டி உயர்ந்து, அது உங்கள் குடும்ப பட்ஜெட்டை நெரித்து விடலாம். அதனால் நோ கடன்.இன்னொரு முக்கியமான எமன், கடன் அட்டை. அதை வீட்டில் ஏதேனும் மறைவான இடத்தில் வைத்து மறந்துவிடுங்கள். சுபிட்சம் திரும்பிய பிறகு, அதை தேடி எடுத்துக்கொள்ளலாம்.
சேமிப்பு: இப்போதிலிருந்தே உங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சம்பளத்தில், பாதியளவைச் சேமித்துவிட்டு, மீதி பாதியில் வாழப் பழகுங்கள். அனாவசியம், ஆடம்பரம் என்று தோன்றக்கூடிய, அத்தனை செலவுகளையும் நிறுத்திவிடுங்கள்.
மூத்தோரின் மருத்துவம், பிள்ளைகளின் கல்வி போன்ற செலவுகள் அத்தியாவசியமானவை. அவற்றுக்குப் போதிய அளவு பணத்தை எடுத்துவைத்து, குடும்ப பட்ஜெட் போடுங்கள்.சின்னச் சின்ன தொகை கிடைத்தாலும், அதை வங்கியில் சேமியுங்கள். எங்கே கூடுதல் வட்டி கிடைக்கிறது என்பதை கவனமாகப் பார்த்து, முதலீட்டை மாற்றிக்கொள்ளுங்கள்.
நம்பிக்கையான பெருநிறுவனங்கள் கடன் பத்திரங்கள் வெளியிடுகின்றன. அதேபோல், மியூச்சுவல் பண்டுகளில் குறுகிய கால கடன் பத்திர பண்டுகள் உள்ளன. இவற்றில் முதலீடு செய்து, கூடுதல் வருவாய் ஈட்ட முடியுமா என்று பாருங்கள்.இந்த நேரம் பார்த்து நிறைய நிறுவனங்கள் புற்றீசல் போல் கிளம்பும். கூடுதல் வட்டி ஆசை காட்டி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கலாம். ஜாக்கிரதை, இவற்றில் எங்கேயும் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
தங்கம்: தங்கமாகவோ, தங்க, ஈ.டி.எப்.பாகவோ முதலீடு செய்யலாம். கடந்த இரண்டு மாதங்களில், பங்குச் சந்தை வீழ துவங்கியவுடனே, தங்கத்தின் விலை உயரத் துவங்கிவிட்டது. அடுத்துவரும் மாதங்களில், இன்னும் விலை உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. தங்க, ஈ.டி.எப்., ஆக முதலீடு செய்தால், விலையுயர்வின் பலனை நீங்கள் பெற வாய்ப்புண்டு.
கூடுதல் வேலை: ஒரே ஒரு வேலையில் மட்டுமே தேங்கியிராமல், உங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள். இரண்டு, மூன்று பகுதி நேர வேலைகள் செய்து கூடுதல் வருவாய் ஈட்ட முடியுமா என்று பாருங்கள்.பெருமழை, வெள்ளம் வருவதற்கு முன், இந்திய வானிலை மையம், ‘ரெட் அலர்ட்’ கொடுத்து, உஷார்படுத்தும் இல்லையா? அதுபோன்ற அணுகுமுறை தான் இது.
ரெட் அலர்ட் பயனற்றும் போனதுண்டு. ஆனால், முன்னெச்சரிக்கையோடு இருப்பது என்பது மனரீதியான தயாரிப்பு.அப்போதே கவனமாக இருந்திருக்கலாமே என்று சோதனை வந்தபின் வருந்துவதில், பிரயோஜனம் இல்லை. ஜாக்கிரதையாக இருந்துவிடலாமே!
ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|