பதிவு செய்த நாள்
30 அக்2018
23:37

புதுடில்லி : ‘‘உலகளவில், மூன்றாவது மிகப் பெரிய பணக்கார நாடாக இந்தியா உருவாகி வருகிறது,’’ என, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர், முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
அவர், டில்லியில், 24வது மொபைல் போன் மாநாட்டில் பேசியதாவது: ரிலையன்ஸ், 1990 களில், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடத் துவங்கியது.அப்போது, கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து மீண்ட நிலையில், இந்திய பொருளாதாரம், 35 ஆயிரம் கோடி டாலர் என்ற அளவிற்கு இருந்தது; இன்று, 3 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியா, உலகின் மூன்றாவது மிகப் பெரிய பணக்கார நாடாக உயர்வதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த, 20 ஆண்டுகளில், இந்தியா, உலகிற்கே தலைமை தாங்கும்.சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.இதற்கு, நம்மிடம் உள்ள அபரிமிதமான இளைஞர்களின் வளம் துணை நிற்கும்.
உலகளவில், முதல் இரண்டு தொழில் புரட்சிகளுக்கு, நிலக்கரி மற்றும் நீராவி; மின்சாரம் மற்றும் கச்சா எண்ணெய் வித்திட்டன. இவற்றில், இந்தியாவின் பங்கு மிகச் சொற்ப அளவிற்கே இருந்தது. கம்ப்யூட்டர் சார்ந்த மூன்றாவது தொழில் புரட்சியின் போது தான், இந்தியாவின் பங்கு, சொல்லிக் கொள்ளும்படி இருந்தது.
தற்போது, திட ரீதியான, மின்னணு மற்றும் உயிரி தொழில்நுட்பங்களின் கலவையான, நான்காவது தொழில் புரட்சி துவங்கியுள்ளது.இதில், இந்தியா, வெறும் பங்களிப்பை மட்டும் வழங்காமல், உலகிற்கே தலைமையேற்கும் என, உறுதியாக கூறுகிறேன்.இந்தியாவில் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் அதிகம் உள்ளனர். அது தான் நமது பலம்.
கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் உதிக்கின்ற அறிவுசார் உத்திகள் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கக் கூட முடியவில்லை.உலகளவில், தொழில்நுட்பம் சார்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கு முன், இந்தியா, இத்தகைய தொழில் முனைவு ஆர்வத்தை கண்டதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளியிலேயே....
ஆரம்பப் பள்ளியில் இருந்தே, குழந்தைகளிடம், தொழில்நுட்ப ஆர்வத்தை வளர்க்க வேண்டும். கருத்துருவாக்கம், தொடர்பு, கூட்டு, உத்தி என்ற நான்கு திறன்களை, மாணவர்களிடம் விதைக்க வேண்டும். இந்த திறமைகள், ‘டிஜிட்டல் இந்தியா’வின் நீடித்த தலைமைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.
– முகேஷ் அம்பானி, தலைவர், ரிலையன்ஸ் குழுமம்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|