பதிவு செய்த நாள்
07 டிச2018
00:36
புதுடில்லி:‘நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.2 சதவீதமாக குறையும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்க்ஸ்’ மறுமதிப்பீடு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.4 சதவீதம்; 2019 –- 20ம் நிதியாண்டில், 7.5 சதவீதமாக இருக்கும் என, ஜூலையில் மதிப்பிடப்பட்டிருந்தது.ஆனால், நிதிச் செலவினங்கள் அதிகரித்து உள்ளதாலும், கடன் வசதி சுலபமாக கிடைக்காத சூழல் காரணமாகவும், பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என, கணிக்கப்பட்டுள்ளது.
அதனால், நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி, 7.4 சதவீதத்தில் இருந்து, 7.2 சதவீதமாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.இது, 2019- – 20 மற்றும் 2020- – 21ம் நிதியாண்டுகளில் முறையே, 7.0 மற்றும் 7.1 சதவீதமாக இருக்கும்.நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 8.2 சதவீதமாக இருந்தது.
இது, ஜூலை – செப்டம்பர் காலாண்டில், 7.1 சதவீதமாக குறைந்துள்ளது.இதே காலத்தில் நுகர்வு, 8.6 லிருந்து, 7 சதவீதமாக சரிந்த போதிலும், வளர்ச்சி விகிதம் நன்றாக உள்ளது. கடந்த நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டு முதல், முதலீடுகள் அதிகரித்துள்ளன.சர்வதேச நிலவரங்கள், இந்திய பொருளாதார வளர்ச்சியில், மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக இறக்குமதி அதிகரித்து, நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சரிவு தடுக்கப்பட்டுள்ளது
மத்திய அரசு, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அதிக முதலீடு மேற்கொண்டுள்ளது. இதனால், மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான, முதலீட்டு விகிதத்தின் சரிவு தடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வர உள்ளதால், மத்திய அரசின் நிதிக் கொள்கை, வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருக்கும் எனலாம். வரும் ஆண்டு இறுதியில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 75 ஆக இருக்கும்.‘பிட்ச் ரேட்டிங்க்ஸ்’ அறிக்கை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|