பதிவு செய்த நாள்
11 டிச2018
00:16

மும்பை:வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை, நேரடி வீடியோ வசதி மூலம், வாடிக்கையாளர்களின் விபரங்களை சரிபார்க்க அனுமதிப்பது குறித்து, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர் விபரங்களை சரிபார்க்க, ‘ஆதார்’ பயன்படுத்துவதற்கு, கடந்த செப்டம்பரில், சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.
இதையடுத்து, அக்டோபரில், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் தனி நபர் அடையாள ஆணையம், ஆதார் அடிப்படையிலான வாடிக்கையாளர் சரிபார்ப்பு நடைமுறையை நிறுத்துமாறு, அனைத்து நிதி பரிவர்த்தனை நிறுவனங்களுக்கும், ‘நோட்டீஸ்’ அனுப்பியது.இதனால், ஆதார் மூலம், சுலபமாக வாடிக்கையாளர் விபரங்களை சரிபார்த்து, சேவை வழங்கி வந்த வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், ‘இ – வாலட்’ நிறுவனங்கள் ஆகியவை, சிரமத்தை சந்தித்து வருகின்றன.ஆலோசனைஇதையடுத்து, வாடிக்கையாளரை தெரிந்து கொள்வோம் நடைமுறையில், நேரடி வீடியோ உள்ளிட்ட மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, மின்னணு பணப் பரிவர்த்தனை நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:கடந்த வாரம், ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள், நிதி நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது, இணைய வடிவமைப்பான, எக்ஸ்.எம்.எல்., மூலம், ஆதார் தரவுகளில் இருந்து, வாடிக்கையாளரின் தகவலை வரையறைக்கு உட்பட்டு பெறலாம் என, தெரிவிக்கப்பட்டது.
இந்த, மின்னணு அங்கீகார நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்து, பரிசீலிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இந்த முறையில், ஆதார் அடையாள அட்டைக்காக, வாடிக்கையாளர் அளித்த கைவிரல் ரேகை பயன்படுத்தப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.இக்கூட்டத்தில், ஆதாருக்கு மாற்றாக, வீடியோ மூலம் வாடிக்கையாளர் விபரங்களை பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தலாம் என, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் பிரதிநிதிகள் யோசனை தெரிவித்தனர்.
அதை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏற்றுக் கொண்ட போதிலும், வாடிக்கையாளர் விபரங்களை சேகரிப்பதில், பதிவு செய்த வீடியோவுக்கு பதிலாக, அதிக பாதுகாப்பான, நேரடி வீடியோ பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறினர்.இத்திட்டத்திற்கு, தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிலவும், ஆதரவு தெரிவித்தன.இக்கூட்டத்தில், இணைய வசதியின்றி, ‘கியூஆர்’ ஸ்கேன் மூலம், வாடிக்கையாளர் சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.சட்ட உரிமைஆனால், இந்த வசதியை செயல்படுத்த, நிதி துறை நிறுவனங்கள் போதிய அளவிற்கு தயாராகவில்லை என்பதால், அது குறித்து பின்னர் விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.
இணைய வசதியின்றி, ஆதார் அடிப்படையில், வாடிக்கையாளர் சரிபார்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தவே, ரிசர்வ் வங்கி அதிக ஆர்வம் காட்டுகிறது. இதற்கு, வாடிக்கையாளரை தெரிந்து கொள்வோம் நெறிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும்.அப்போது தான், ரிசர்வ் வங்கிக்கு அத்திட்ட செயலாக்கத்தில், சட்ட அங்கீகாரம் கிடைக்கும். அதன்படி, ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர் சரிபார்ப்பு தொடர்பான புதிய நடைமுறைகளை பரிசீலித்து, விரைவில் அறிவிக்கும் என, தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|