பதிவு செய்த நாள்
11 டிச2018
23:31

மும்பை:‘‘லண்டனில் இருந்து அழைத்து வரப்பட உள்ள விஜய் மல்லையாவிடம் இருந்து, வாராக் கடன் அனைத்தும் விரைவாக வசூலிக்கப்படும்,’’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர், ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனரான, விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாமல், 2016ல், லண்டனுக்கு தப்பி ஓடி விட்டான்.இதையடுத்து, சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று, விஜய் மல்லையாவை, நாடு கடத்த லண்டன் கோர்ட், நேற்று முன்தினம் உத்தரவிட்டது.இது குறித்து, எஸ்.பி.ஐ., தலைவர், ரஜ்னீஷ் குமார் கூறியதாவது:
விஜய் மல்லையாவை, நாடு கடத்தும் உத்தரவு, வங்கி கடனை திரும்பச் செலுத்தாமல் உள்ளோருக்கு தெளிவான, அதேசமயம், ஒரு செய்தியை உரக்க கூறியுள்ளது.வங்கியில் கடன் வாங்கி, திரும்பச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முடியாது என்பது தான், அந்த செய்தி.இதன் மூலம், வாராக் கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அதை வசூலிப்பது சாத்தியம் என்பது உணர்த்தப்பட்டுள்ளது.
சுத்தம் தேவை
நாட்டிற்கு முதலீடு தேவைப்படுகிறது. கடன் அளிப்போருக்கும், கடன் வாங்குவோருக்கும் முக்கியமானதாக, கடன் தொழில் உள்ளது.வங்கி விவகாரங்களில் சுத்தமாக நடந்து கொள்ள வேண்டும்; கடன் வழங்கப்படுவதன் நோக்கத்தை புரிந்து செயல்பட வேண்டும் என்ற செய்தியும், உணர்த்தப்பட்டுஉள்ளது.விஜய் மல்லையா, அசல் தொகை முழுவதையும் திரும்பத் தருவதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.ஆனால், அது குறித்து, எஸ்.பி.ஐ., தலைமையிலான, 13 வங்கிகளின் குழுவிற்கு, இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
விஜய் மல்லையா, நாடு கடத்தப்பட உள்ளதால், அனைத்து வாராக் கடன்களும் விரைவாக வசூலிக்கப்படும். இது ஒரு துவக்கம் தான்.அடுத்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய, வைர வியாபாரிகள், நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரும் நாடு கடத்தப்படுவர். அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இத்தகைய நடவடிக்கைகள் மூலம், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள் விரைவாக வசூலாகும்.
ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து, உர்ஜித் படேல் விலகியது குறித்து, கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. மின் துறையைச் சேர்ந்த, ஏழு நிறுவனங்களின் வாராக் கடன்களுக்கு, மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வங்கிகளில், நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை, குறைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. இது, இந்திய நிதித் துறைக்கு நல்லது. வங்கியின் உரிமம் ஓரிடத்தில் மட்டும் குவிந்திருப்பதை விட, பரவலாக இருப்பது சிறந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
வசூல் உயருகிறது
வங்கிகள், 2017-- – 18ம் நிதியாண்டில், 74,562 கோடி ரூபாய் வாராக் கடனை வசூலித்துள்ளன. இதை, நடப்பு, 2018- – -19ம் நிதியாண்டில், இரு மடங்கு உயர்த்தி, 1.50 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்குமாறு, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், வங்கிகள், 36,551 கோடி ரூபாய், வாராக் கடனை வசூலித்துள்ளன. இது, கடந்த நிதிஆண்டின் இதே காலத்தில் வசூலிக்கப் பட்டதை விட, 49 சதவீதம் அதிகம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|