பதிவு செய்த நாள்
22 டிச2018
00:03

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, பேங்க் ஆப் பரோடா உடன், விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க, வங்கி இணைப்பு நடவடிக்கைக்கான சிறப்பு குழு, ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே, இந்த மூன்று வங்கிகளின், இயக்குனர் குழுக்களும், இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. தற்போது, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், வங்கி இணைப்புக்கான, ஏ.எம்., எனப்படும், மாற்று நடவடிக்கை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இணைப்பு பணிகள் துவங்க உள்ளன. அடுத்த ஆண்டு, மார்ச்சுக்குள், மூன்று வங்கிகளின் இணைப்பு பணிகள் முடிவடையும்.
பங்கு விலை உயர்வு ஒருங்கிணைந்த இரண்டு வங்கிகளை உள்ளடக்கிய, பேங்க் ஆப் பரோடாவின் பணி, அடுத்த ஆண்டு, ஏப்., 1 முதல் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இணைப்புக்கு பின், பேங்க் ஆப் பரோடா, 14.82 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்துடன், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஆகியவற்றை அடுத்து, மூன்றாவது பெரிய வங்கியாக உருவெடுக்கும்.
இவ்வங்கியின் நிதியாதாரம் வலுவடையும். பொதுத் துறை வங்கிகளின் நிகர வாராக்கடன், சராசரியாக, 12.13 சதவீதமாக உள்ளது. இதை விட குறைவாக, பேங்க் ஆப் பரோடாவின் நிகர வாராக்கடன், 5.71 சதவீதம் என்ற அளவில் இருக்கும். மூன்று வங்கிகள் இணைப்பிற்கு, வங்கி இணைப்பு நடவடிக்கை குழு ஒப்புதல் அளித்துள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்புக்கு, பேங்க் ஆப் பரோடா நேற்று தெரிவித்தது.
இதையடுத்து, நேற்று மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இடையே, இவ்வங்கி பங்கு, 0.30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. வர்த்தகத்தின் இறுதியில், 0.15 சதவீத உயர்வுடன், 115.05 ரூபாயில் நிலை கொண்டது. வலுவடையும் மத்திய அரசு, வாராக்கடன் பிரச்னையில் உள்ள சிறிய வங்கிகளை, பெரிய வங்கிகளுடன் ஒன்றிணைத்து, வங்கி துறையை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், பொதுத் துறை வங்கிகள், அவற்றின் நிதி தேவைகளுக்கு, மத்திய அரசை சார்ந்திராமல், சுயமாக பூர்த்தி செய்து கொள்ள முடியும்
அதன்படி, கடந்த ஆண்டு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியவற்றை இணைத்துக் கொண்டது. இதன் மூலம், சர்வதேச அளவில், 'டாப் - 50' வங்கிகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. அடுத்து, பேங்க் ஆப் பரோடா வங்கியுடன், சிறிய வங்கிகளான தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை இணைக்கப்பட உள்ளன.
மாற்று நடவடிக்கை குழு மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கை குறித்து பரிசீலிக்க, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், ஏ.எம்., எனப்படும் மாற்று நடவடிக்கை குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில், ரயில்வே துறை அமைச்சர், பியுஷ் கோயல், பாதுகாப்பு துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் உள்ளனர். இக்குழு, பொதுத் துறை வங்கிகளின் இயக்குனர் குழு ஒப்புதல் அளிக்கும் இணைப்பு திட்டங்களை பரிசீலித்து, ஒப்புதல் அளிக்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|