பதிவு செய்த நாள்
22 டிச2018
23:22

புதுடில்லி: வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், ‘ஏஞ்சல் பண்டு’ எனப்படும், துவக்க கால நிதியுதவி நிறுவனங்களிடம் பெறும் முதலீடுகளுக்கு, வரி விலக்கு பெறலாம்.இதற்கு, அதற்கென அமைக்கப்பட்டுள்ள, அமைச்சரவை வாரியத்திடம் விண்ணப்பிக்கலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலர், ரமேஷ் அபிஷேக் கூறியதாவது:ஒரு நிறுவனம் பெறும் முதலீட்டிற்கு, வருமான வரி சட்டம், பிரிவு, 56ன் கீழ், வரி விதிக்கப்படுகிறது. சட்ட விரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கும் நோக்கில், இப்பிரிவு உருவாக்கப்பட்டது. அதேசமயம், இதன் உட்பிரிவு, மாற்று முதலீட்டு நிதியங்களின் முதலீடுகளுக்கு, வரி விலக்கு அளிக்க வகை செய்கிறது.எனினும், ஒரு பெரும் பணக்காரர் அல்லது ஒரு தனிநபர், புதிதாக துவங்கும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதற்கு வரி விலக்கு அளிக்கும் அம்சம், சட்ட உட்பிரிவில் இல்லை.எனவே, வருமான வரித் துறையுடன் இணைந்து, மத்திய அரசு துறைகளின் பங்களிப்புடன், 2016ல், தனி வாரியம் அமைக்கப்பட்டது.இந்த வாரியத்திடம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விண்ணப்பித்து, அவற்றின் துவக்க கால முதலீடுகளுக்கு, வரி விலக்கு பெறலாம்.அதன்படி, இந்தாண்டு ஏப்ரல் வரை, 94 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அவற்றின் முதலீடுகளுக்கு வரி விலக்கு பெற்றுள்ளன.அதன்பின், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, முதலீட்டு விதிமுறைகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.அதன்படி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், துவக்க காலத்தில் பெற்ற முதலீடு உட்பட, மொத்த முதலீடு, 10 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், வரி விலக்கு பெறலாம்.இருந்தபோதிலும், தற்போது வரை, இரு நிறுவனங்கள் மட்டுமே, வரி விலக்கு பெற்றுள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, வரி விலக்கு பெறுவதில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அது குறித்து, மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு வாரியத்திடம் தெரிவிக்கலாம்.அப்புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக, தீர்வு காணப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் உண்மையான முதலீடுகளுக்கு, வரி விலக்கு அளிக்க, மத்திய அரசு விரும்புகிறது.இதற்காக உருவாக்கப்பட்டுள்ள நடைமுறையை, சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பான அனைத்து விபரங்களும், வலைதளத்தில் உள்ளன. அவற்றை பின்பற்றி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பயன் அடைய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.14 ஆயிரம் நிறுவனங்கள்மத்திய அரசு, 2016, ஜனவரியில் 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், வலைதளம் மூலம் புதுமையான வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன. 'பிளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல்' போன்ற நிறுவனங்கள் இதற்கு உதாரணம். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, துவக்க காலத்தில் தேவைப்படும் முதலீடுகளை 'ஏஞ்சல் பண்டு' எனப்படும் நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன. ஓராண்டில், சராசரியாக, 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, இத்தகைய முதலீடு கிடைக்கிறது. நாட்டில், 14ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|