பதிவு செய்த நாள்
12 ஜன2019
23:48

புதுடில்லி:‘‘இந்தியாவை, சர்வதேச வர்த்தகச் செயல்பாடுகளுடன் முழுமையாக ஒன்றிணைக்கும் அம்சங்களுடன், விரைவில் புதிய தொழில் கொள்கை வெளியிடப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
அவர், இந்திய தொழிலக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, மேலும் பேசியதாவது:இந்திய பொருளாதாரத்தை, 2035ல், 10 லட்சம் கோடி டாலராக உயர்த்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், அனைத்து நாடுகளும் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
சேவைகள்
நம் இலக்கில் ஒரு பகுதியை, எண்ணற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படும் போது அடைய முடியும். எந்த ஒரு நாடும், தனியாக வளர்ச்சி காண முடியாது.நாட்டின் ஏற்றுமதியில், கோடிக் கணக்கான டாலர் வருவாயை வழங்கும் சேவைகள் துறை முக்கிய பங்களிப்பை கொண்டு உள்ளது.இது போல, 12 துறைகளில் கூடுதல் கவனம் செலுத்த, புதிய தொழில் கொள்கை உதவும்.ஏற்கனவே, வேளாண் ஏற்றுமதி கொள்கையை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதனால், வேளாண் துறை பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.இறக்குமதி செய்யும் நாடுகளின் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப, நாம் பொருட்களை தயாரித்து, ஏற்றுமதி செய்கிறோம். இதில், இரு தரப்பும் பயன் பெறக்கூடிய திட்டங்கள் ஏற்கனவே மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன.
இரட்டைஇலக்கம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, இரட்டை இலக்கிற்கு உயர்த்த வேண்டும் என, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டமும், வழக்கத்தை விட, கூடுதலாக,3 – -4 சதவீதம் வளர்ச்சி காண வேண்டும்; அதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.நம் வளர்ச்சி, அடிமட்டத்தில் இருந்து, உலகளவில் விரிந்து பரவும் வகையில் இருக்க வேண்டும்.
தயாரிப்பில் இருந்து, சேவைகள் துறை வரை; வேளாண் பொருட்களில் இருந்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் வரை; அன்னிய நேரடி முதலீட்டில் இருந்து, பிற நாடுகளில் இந்தியா முதலீடு செய்வது வரை நாம் முன்னேற வேண்டும். அதுவே, நம் வர்த்தக கொள்கையின் நிலைப்பாடு. அதற்கான உந்து சக்தியாக, புதிய தொழில் கொள்கை விளங்கும். வெகு விரைவில், இக்கொள்கை வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
உள்ளாட்சி அமைப்புகள் வலு பெறும்
மத்திய அரசு, 1991ம் ஆண்டின் தொழில் கொள்கைக்கு மாற்றாக, புதிய தொழில் கொள்கையை உருவாக்கியுள்ளது. இது, மத்திய அமைச்சரவை குழுவின் பரிசீலனையில் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும், அவை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், தொழில் பிரிவுகளை அமைத்து, மின்சாரம் உற்பத்தி செய்யவும், புதிய தொழில் கொள்கை துணை புரியும்.
உள்ளாட்சி அமைப்புகள் நிதி திரட்டுவதை ஊக்குவிக்கவும், சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கவும் வழி வகை செய்யும்.ஆய்வு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆய்வுகளால், வர்த்தக ரீதியில் பயன் பெற, அரசு நிதியுதவியில் ஓர் அமைப்பை ஏற்படுத்த உதவும்.சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பயன் பெறும் வகையில், வருங்கால தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தொழில் கொள்கை இருக்கும் எனத் தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|