பதிவு செய்த நாள்
14 ஜன2019
00:00

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, கடந்த இரு வாரங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டின் அக்டோபர் முதல், டிசம்பர் வரையான காலகட்டத்தில், 1 பேரலுக்கு, 30 அமெரிக்க டாலர் வரை விலை குறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் முதல், எண்ணெய் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது.
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே, கடந்த சில மாதங்களாக நிலவி வந்த வர்த்தக மோதலால், இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, இரு நாடுகளும் சுமுகமான சூழலை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன. அப்படி நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் சூழ்நிலையில், எண்ணெய் விலையில் அதிகப்படியான மாற்றங்கள் தவிர்க்கப்படும்.
அமெரிக்காவின் செல் கச்சா எண்ணெய் உற்பத்தி, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இயங்கி வரும் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கையும், கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்து, தற்போது, 175 எண்ணெய் குழாய்கள் இயங்கி வருகின்றன.
தினசரி எண்ணெய் உற்பத்தி, 1 லட்சம் பேரல்அதிகரித்து, மொத்த உற்பத்தி, 10.9 மில்லியன் பேரல் என, உயர்ந்துள்ளது.இதையடுத்து, அதிகரித்து வரும் உற்பத்தி மற்றும் தேவை குறைவால் ஏற்படும் இருப்பு அதிகரிப்பு ஆகிய காரணங்களால், விலை ஏற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற்ற, ‘வளைகுடா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு’ கூட்டத்தில், எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது, ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான அரையாண்டு காலகட்டத்தில், தினசரி எண்ணெய் உற்பத்தியை, 1.2 மில்லியன் பேரல் அளவுக்கு குறைப்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது, எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில், தினசரி எண்ணெய் சந்தை வரவு, 11.45 மில்லியன் பேரல் என, இருந்தது. தற்போது, ஜனவரி 1 முதல், 10 வரையான நாட்களில் தினசரி உற்பத்தி மற்றும் வரவு, 11.38 மில்லியன் பேரலாக சரிந்துள்ளது.
இது, சந்தையில் விலை உயர சாதகமாக அமைந்தது. வரும் நாட்களில் எண்ணெய் விலை, 1 பேரல், 55 டாலர் என்பது நல்ல ரெசிஸ்டென்ட். இதை கடக்க இயலாத நிலையில், சிறிது தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தங்கம்
தொடர்ந்து நான்காவது வாரமாக, தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, உயர்ந்து வர்த்தகம் ஆனது. இதற்கு அமெரிக்க நாணய குறியீடு, சற்று மதிப்பு குறைந்து வர்த்தகமானது, முக்கிய காரணமாகும்.அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என, முன்பு சொல்லப்பட்டிருந்தது. ஆனால், கடந்த வாரம் வியாழன் அன்று நடைபெற்ற கூட்டத்தில், அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர், ஜெரோம் பவுல் பேசுகையில், ‘வட்டி விகித அதிகரிப்பு குறித்து, யோசித்து முடிவெடுக்கப்படும்’ என தெரிவித்தார்.
அமெரிக்காவின் பொருளாதார காரணிகளில் ஒன்றான நுகர்வோர் நம்பிக்கை, கடந்த டிசம்பர் மாதத்தில், ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. அதாவது, பொருளாதாரத்தின் மீதான வளர்ச்சியில்சந்தேகம் இருப்பதாக, நுகர்வோர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.இதன் காரணமாக, முன்பு கூறியபடி, இந்த ஆண்டில் வட்டி விகித மாற்றங்கள் செயல்படுத்தப்படுமா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
இது, தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதற்கு சாதகமாக அமைந்தது. பொதுவாகவே, வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் போது, முதலீட்டாளர்கள், கூடுதல் ஆதாயத்துக்காக தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கமாகும்.
தற்போது வட்டி விகிதம் அதிகரிக்கப்படவில்லை எனில், தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. மேலும், வர்த்தக மோதல், அமெரிக்க அரசு முடக்கப்பட்டுள்ளது ஆகியவையும், தங்கம் விலை தொடர்ந்து உயர்வதற்கு காரணமாக அமைந்துவிட்டது.
கடந்த ஆண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, அதற்கு முந்தைய ஆண்டை விட சரிந்துள்ளது. தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில் சரிந்து இருந்தபோதிலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக, உள்நாட்டில் உயர்ந்தே காணப்பட்டது.
செம்பு
செம்பு விலை, கடந்த வாரம் அதிகரித்து வர்த்தகம் ஆனது. முந்தைய வார சரிவிலிருந்து மீண்டு, அதிகரித்து வருகிறது. செம்பு உற்பத்தி சுரங்கத்தில் ஏற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்த பேச்சில் ஏற்பட்ட நிலை காரணமாகவும், விலையில் ஏற்றம் காணப்பட்டது.உலக அளவில் செம்பு நுகர்வில், சீனா முதலிடம் வகிக்கிறது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்படும் என, அமெரிக்கா அறிவித்து இருந்தது.பின்னர் ஏற்பட்ட பேச்சுகளால் அதிக இறக்குமதி வரி விதிக்கப்படாது என்ற நிலையில், செம்பு விலை ஏற்றம் கண்டது.இருப்பினும், லண்டன் பொருள் வணிக சந்தையில், செம்பின் இருப்பு அதிகரித்து வருவதால், விலை ஏற்றம் கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|