பதிவு செய்த நாள்
14 ஜன2019
00:05

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி வர்த்தகம், பல வாரங்களுக்கு பின், அதிக ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல், 140 புள்ளிகள் ஏற்ற இறக்கத்துடன் நடந்து முடிவுற்றது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகம், கடந்த வாரம், 1,000 புள்ளிகள் ஏற்ற இறக்கங்களுடன் முடிவுற்றது.
நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கைகள் வெளிவர துவங்கி உள்ளன. இந்த முடிவுகளின் அடிப்படையில், வரும் வாரங்களில் சந்தையின் போக்கு அமையும்.கடந்த வாரம், ஆக்சிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஐ.டி.சி., ஆகிய நிறுவனங்கள் உயர்ந்து வர்த்தகம் ஆகின. அதேசமயம், கச்சா எண்ணெய் விலை காரணமாக, சுத்தி கரிப்பு நிறுவனங்களின் பங்குகள், சந்தையில் சரிவை அதிகப்படுத்தின. கடந்த இரண்டு வாரங்களாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதார காரணிகளில் ஒன்று, நுகர்வோர் நம்பிக்கை. இது, கடந்த டிசம்பர் மாதத்தில், அதற்கு முந்தைய ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது.அதாவது, பொருளாதாரத்தின் மீதான வளர்ச்சியில் சந்தேகம் இருப்பதாக, நுகர்வோர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்தியாவின் பொருளாதாரத்தை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 7.3 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த இரு ஆண்டுகளில், 7.5 சதவீதமாக இருக்கும் என்றும் உலக வங்கியின் கணிப்பு தெரிவித்துள்ளது. இதற்கு, முதலீடு மற்றும் நுகர்வோர் தேவை பெருகி வருவது காரணமாகும்.
இதேபோல், கடந்த வெள்ளியன்று, ஏசியன் டெவலப்மென்ட் பேங்க், தன் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், இந்திய பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டு, 7.3 சதவீதமாகவும், 2020ல், 7.6 சதவீதமாகவும் உயரும் என, கருத்து தெரிவித்துள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவு காரண மாக, இந்திய பணவீக்க விகிதம் குறைந்துள்ளது. ஜூன், 2010 மே மாதத்திற்கு பின், டிசம்பர் மாதத்தில் தான் இப்படி குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் குறுகிய கால பணவீக்க விகித இலக்கு, 2 முதல், 6 ஆக இருக்கும் என்றும், டிசம்பர் மாதத்தின் பணவீக்க விகிதம், 2.2 ஆக இருக்கும் என்றும், கருத்துக் கணிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம், 2.33 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த வாரத்தில் நிப்டியை பொறுத்தவரை, அதன் ரெசிஸ்டன்ட், 10,860 மற்றும் 10,940 ஆக இருக்கும். சப்போர்ட், 10,690 ஆகும்.
-முருகேஷ் குமார்-
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|