பதிவு செய்த நாள்
14 ஜன2019
00:15

பொதுவாக, லாபகரமாக இயங்கும் நிறுவனங்களில், முதலீட்டாளர்களுக்கு நிகர லாபத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும், ‘டிவிடெண்ட்’ கொடுக்கும் மரபு உண்டு. மதிக்கத்தக்க நிறுவனங்கள், இதை கொள்கை சார்ந்து செய்வது வழக்கம்.
இந்த டிவிடெண்ட் கொள்கை, ஒவ்வொரு தொழிலிலும் மாறுபடும். சில தொழில்களை நடத்தவும், வளர்க்கவும் அதிக பணம் தேவைப்படாது. ஆகவே, அத்தகைய தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், நிகர லாபத்தை பங்குதாரர்களுக்கு எளிதில் திரும்ப கொடுக்க இயலும்.
பொதுவாக, முதலீட்டு தேவை குறைவாக உள்ள நிறுவனங்கள், அதிக டிவிடெண்ட் கொடுக்கும். இத்தகைய நிறுவனங்கள், நிகர லாபத்தில் அதிக பணத்தை, முதலீட்டாளர்களுக்கும் கொடுப்பது என, தெளிவான கொள்கையை வகுத்து விடுவது வழக்கம்.சமீப காலங்களில், பல நிறுவனங்கள், நிகர லாபத்தில், 20 முதல், 30 சதவீதம் வரை, முதலீட்டாளர்களுக்கு திரும்ப கொடுக்கும் மரபை உருவாக்கி, கடைபிடிக்கின்றன.
தமிழக நிறுவனங்களில், டி.வி.எஸ்., முருகப்பா குழுமம் போன்றவற்றை, இதற்கு முன்னோடியாகச் சொல்லலாம். மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ போன்றவையும், இத்தகைய சிறந்த மேலாண்மை பண்புகளை கடைப்பிடிக்கின்றன.ஆனால், தொடர்ந்து அதிக டிவிடெண்ட் கொடுப்பது, பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே என்பதில், சிறிதும் சந்தேகம் இல்லை. பல பன்னாட்டு நுகர்வு தொழில் நிறுவனங்கள், லாபத்தில், 60 – -75 சதவீதம் வரை டிவிடெண்ட் கொடுத்து வருகின்றன.ஆக, பங்கு முதலீட்டு லாபம் என்பது, பங்குகளை விற்றால் மட்டுமே நம் கைக்கு வரும் என்கிற சூழல் மாறி, இந்த டிவிடெண்ட் மூலம் தொடர்ச்சியான வருவாய் ஈட்டுவதாலும் கிடைக்கும் என்ற மிகச் சிறந்த வழி நமக்கு கிடைத்துள்ளது.
ஆனால், சமீப காலங்களில், பல நிறுவனங்கள், டிவிடெண்ட் கொடுப்பதற்கு பதிலாக, ‘பைபேக்’ என்ற யுத்தியை, அதிகம் பயன்படுத்துகின்றன. இதற்கு முக்கிய காரணம், புதிதாக அமலுக்கு வந்த வரி சட்டங்கள். ஒரே நிகர லாபம், முதலீட்டாளரை சென்று அடையும் முன், மூன்று முறை வரிக்கு உட்படுத்தப்படும் அவலம் தான் இதற்கு முக்கிய காரணம்.
பைபேக் முறையில் நமக்கு பல சாதகங்கள் உண்டு. முக்கியமாக, நிறுவனத்தின் எதிர்காலத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள், பங்குகளை விற்காமல் இருக்கும்போது, ஒவ்வொரு பைபேக்கிற்கு பிறகும், நிறுவன மொத்த பங்கில், தங்கள் பங்கீடு உயர்வதால் பயன் பெறுவர்.வருங்கால நிறுவன வளர்ச்சியில், அவர்கள் அதிக பயன் அடைவர். இருந்தும், பல நிறுவனங்களில், நிறுவன முதலாளிகளும், தங்கள் பங்குகளை பைபேக் மூலம் விற்கும் சூழலும் ஏற்பட்டு விடுகிறது.
இதற்கு, பல காரணங்கள் உண்டு. தனிப்பட்ட பணத் தேவைகள், டிவிடெண்ட் முறையை விட, பைபேக் முறையில் வரி குறைவு, இதர முதலீட்டு தேவைகள் போன்றவை சில முக்கிய காரணங்கள்.சமீப காலங்களில், அரசே தன் சொந்த பொதுத் துறை நிறுவனங்களில், அதிகம் பைபேக் முறையை கையெடுத்து, தன் பங்குகளை பொதுத் துறை நிறுவனத்திற்கு அதிகம் விற்றுள்ளது.
வரி வேற்றுமையையும் கடந்து, அரசின் இந்த முடிவுக்கு முக்கியமான காரணம், மத்திய பட்ஜெட்டில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையும், அதை ஈடு செய்ய ஏற்படுத்தப்பட்ட அரசின் பங்கு விலக்கு இலக்குகளுமே.
வரும் காலங்களில், இந்த முறை இன்னும் முக்கியத்துவம் பெறும் என்பதில், சிறிதும் சந்தேகம் இல்லை. எனவே, இதை எப்படி கையாண்டு வெற்றி பெறுவது என்பதை முதலீட்டாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்-
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|