பதிவு செய்த நாள்
14 ஜன2019
00:19

சமீபத்திய, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், மூன்று முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. படிப்படியாக செய்யப்பட்டு வரும் மாற்றங்கள், வணிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளதா?சரக்கு மற்றும் சேவை வரியை நாடெங்கும் அறிமுகப்படுத்தியதில் இருந்து, தொடர்ச்சியான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
பல மாநில நிதி அமைச்சர்கள் இடம்பெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டங்கள், ஒவ்வொரு முறையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.இங்கேயுள்ள சிறு வணிகர்கள், பெரு வணிகர்கள் என, அனைத்து தரப்பினரும் தெரிவிக்கும் பல்வேறு கருத்துகளை, இந்தக் கவுன்சில் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.
அவர்கள் சந்திக்கும் சிரமங்களும், நடைமுறை சிக்கல்களும் புரிந்து கொள்ளப்படுகின்றன.அதனால் தான், ஒவ்வொரு கவுன்சில் சந்திப்பிலும், மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என, அரசு கடுமை காட்டாமல் இருப்பதே, மிகப்பெரிய வளர்ச்சி தான். சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, ஜி.எஸ்.டி., திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் சந்திப்பில், பல பொருட்கள், 28 சதவீத அடுக்கில் இருந்து, 18 சதவீத அடுக்குக்கு நகர்த்தப்பட்டன. 28 சதவீத அடுக்கே முழுமையாக நீக்கப்படலாம், என்ற பேச்சும் அடிபட்டது.
முன்னேற்றங்கள்
தற்போதைய, ஜி.எஸ்.டி., கூட்டத்தில், அடுத்த கட்ட முன்னேற்றம். 20 லட்சம் ரூபாய் வரை விற்று முதல் செய்து வந்த நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு வந்தது; அது, 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி., ‘காம்போசிஷன்’ எனும், கூட்டு திட்டத்தை தேர்வு செய்வ தற்கான விற்றுமுதல் வரம்பு, 1 கோடி ரூபாயாக இருந்தது. அது, 1.5 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.இவை இரண்டையும் பற்றி, நாம் முன்னரே இந்தப் பகுதியில் எழுதியிருக்கிறோம். வரி விதிப்பில் இருந்து, விலக்கு அளிப்பதற்கான வரம்பு, 80 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட வேண்டும் என்பதே, சிறு வணிகர்களின் கோரிக்கை.வரி விலக்கு வரம்பு, 20 லட்சத்தில் இருந்து, 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதே துணிச்சலான முடிவு தான்.
அதேசமயம், இதனால், பெரிய வருவாய் இழப்பும் இல்லை. ஜி.எஸ்.டி., செலுத்த பதிவு செய்தவர்களில், 50 சதவீதம் பேர், இந்த வரம்பு உயர்வால் வெளியேறலாம்.அவர்களால், மொத்த, ஜி.எஸ்.டி., வருவாயில், 2,000 – 3,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம். இது, மொத்த, ஜி.எஸ்.டி., வசூலில், 2 – 3 சதவீதம் மட்டுமே.மேலும், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான, அரவிந்த் சுப்ரமணியம், வரி செலுத்தும் சிறு வணிகர்களுக்கான விற்றுமுதல் வரம்பு, 40 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தது, இங்கே நினைவு கூரத்தக்கது.
நியாயமான அணுகுமுறை
மிக முக்கியமான இன்னொரு முடிவும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. இயற்கை பேரிடர்களின் போது, ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்கவும், நிதி ஆதாரங்களை திரட்டவும், ‘பேரிடர் வரி’ என்ற கூடுதல் வரியை விதிக்கலாம். இதற்கு, ஜி.எஸ்.டி., விதிமுறைகளிலேயே இடம் இருக்கிறது.
முதன்முறையாக, கேரள அரசு, தங்கள் மாநிலத்துக்குள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, 1 சதவீதம், ‘பேரிடர் வரி’ விதித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பொதுவாக, இந்த வரி நாடெங்கும் விதிக்கப்படுமோ என்ற அச்சம் இருந்தது; புகையிலை, பான் மசாலா போன்ற, ‘பாவப்பட்ட பொருட்களின்’ மீது சுமத்தப்படுமோ என்றஎண்ணமும் இருந்தது.
இவை இரண்டும் இல்லாமல், எந்த மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ, அந்த மாநிலம் மட்டும் தம் வரியை உயர்த்திக்கொள்ள அனுமதிப்பது, நியாயமான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.ஜி.எஸ்.டி.,யில் இன்னும் செய்யப்பட வேண்டியவை ஏராளம். ஒவ்வொரு துறையும், தாங்கள் சந்திக்கும் சிரமங்களை தெரிவித்து வருகின்றன.
கூட்டுத்திட்டம்
மிக முக்கியமான ஒரு குறை, ஜி.எஸ்.டி., கூட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்பவர்கள் தெரிவிப்பது. அதாவது, கூட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்பவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை கணக்குகளைச் சமர்ப்பித்தால் போதும்; ஒவ்வொரு காலாண்டும், வரி செலுத்தினால் போதும்.இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, உள்ளீட்டு வரியைப் பெற முடியாது. அதேபோல், இவர்களிடம் இருந்து பொருட்களையோ, சேவைகளையோ பெறுபவர்களால், உள்ளீட்டு வரியைக் கோரவும் முடியாது.
இதனால், கூட்டுத் திட்டத்தை ஏற்றவர்கள் தனித் தீவு போல் ஆகிவிட்டனர். பெரிய நிறுவனங்கள் அனைத்தும், இத்தகைய சிறு நிறுவனங்களோடு எந்தவித வர்த்தகப் பரிவர்த்தனையும் செய்ய மாட்டோம் என்கின்றன.
உள்ளீட்டு வரியைக் கோர முடியாது என்றால், இவர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களின் மொத்த செலவும் அவர்கள் தலைமேல் தான். அதாவது சிறு நிறுவனங்களிடம் இருந்து முழுத் தொகையும் கொடுத்து வாங்கி, பெரு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்களிடம் போய் சேரும்போது, உண்மையில் அப்பொருட்கள் இரட்டை வரி விதிப்பையே சந்திக்கின்றன. இது ஒரு பக்கம் என்றால், உள்ளீட்டு வரியைப் பெற முடியாத நிறுவனங்களோடு எதற்குப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என, பெரு நிறுவனங்கள், அவற்றை விலக்கி வைத்து விடுகின்றன.
இது ஒரு இடி என்றால், தாங்கள் செய்யும் உற்பத்திகளுக்கோ, சேவைகளுக்கோ, சிறு நிறுவனங்களால், உள்ளீட்டு வரியைப் பெற முடியவில்லை என்பது இன்னொரு இடி.ஜி.எஸ்.டி., கூட்டுத் திட்டத்தை ஏற்கும் நிறுவனங்கள், உள்ளீட்டு வரியைக் கோர முடியாது என்பது தான் முன்நிபந்தனை. இதனால், இவர்களும் முழுத் தொகையை செலுத்தியே பொருட்களை வாங்க வேண்டும்.
ஜி.எஸ்.டி., என்பதன் அடிப்படையே, ஒவ்வொரு நிலையிலும் வரி கூடிக் கொண்டே போகக்கூடாது என்பது தான். ஆனால், கூட்டுத் திட்டத்தில் அந்த அடிப்படை ஆட்டம் காண்கிறது.இன்னொரு புறம், சிறு வணிகர்கள் தான் இந்தியாவில் பெருமளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றனர் என்பது நிதர்சனம். அவர்கள், பிற உற்பத்தியாளர்களுக்கு சமமாக நடத்தப்பட்டால் தான், வணிகத்தில் நெருடல் இல்லாமல் இணக்கம் ஏற்படும்.வழக்கம் போல், அடுத்த, ஜி.எஸ்.டி., கூட்டத்தில், மேலும் பல அடுக்குகள் களையப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.
-ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்-
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|